அதிமுக வாக்குரிமை மீட்பு: திமுக களத்தில்! அமைச்சர் டிஆர்பி ராஜா பரபர பேச்சு
உங்க அம்மா யாரு உங்க அப்பா யாரு உங்க தாத்தா எங்க இருக்காரு எங்கேந்து வந்தாருனு என பல தகவல்கள் கேட்பார்கள்.

திருவாரூர்: அதிமுகவினரின் வாக்குரிமையை மீட்கப்போவது திமுகதான் என்று நன்னிலத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பேசினார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா மேடையில் பேசியதாவது: நமது தொண்டர்கள் ஒவ்வொரு வீடாக ஏறி ஏறி இறங்கி கொண்டிருக்கிறார்கள். நாமும் இன்னொரு பீகார் போல, எப்படி கொடுமைகள் எல்லாம் அனுபவித்திருக்கிறார்கள் என்கிற வாக்குகள் எல்லாம் பறிக்கப் பார்க்கிறார்களோ அதே மாதிரி நம்முடைய வாக்குகள் போகக்கூடாது என்பதற்காக நமது முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் எஸ் ஐ ஆர்-ஐ எதிர்த்து களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அற்புதமான எதிர்க்கட்சி
அதே நேரத்தில் எஸ் ஐ ஆர் என்ற கொடிய முயற்சியை நமது வாக்குரிமையை அளிப்பதற்காக இந்த பணியை பாஜக செய்து கொண்டிருக்கிறது. நமக்கு வாய்த்த அற்புதமான எதிர்க்கட்சி, அவர்களுக்கு அடிமையாக இருக்கக்கூடிய எதிர்க்கட்சி அவர்களோடு சேர்ந்து இருப்பது ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஆனால் நாங்கள் இருக்கிறோம்.உங்களது வாக்குரிமையை மீட்க போவது திமுகதான். இனிமே வீட்டிற்கு கொடுக்கும் விண்ணப்பங்களை தயவு கூர்ந்து சரியாக பதிவு செய்ய வேண்டும்.
இதனை நமது முதலமைச்சர் விட மாட்டார்
திமுக தமிழ்நாட்டுக்காக பண்ற விஷயம் இல்லை. இந்தியாவுக்காக பண்ணுகிற விஷயம். ஏனென்றால் தமிழ்நாட்டில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டால் தான் இந்தியாவிற்கு ஜனநாயகம் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்கிற உறுதி எல்லா கட்சியினருக்கும் தெரியும் பாஜகவுக்கும் தெரியும். ஆகையால்தான் இங்கே வந்து எப்படியாவது இந்த ஆட்சிக்கு எதிராக கொண்டு வரணும் என துடிக்கிறார்கள். இதனை நமது முதலமைச்சர் விட மாட்டார். எந்த இயக்கத்தில் நீங்கள் இருந்தாலும் நமது வாக்குரிமைகள் பாதுகாக்கப்படும். ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. எனவே அனைவரும் இந்த விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யுங்கள் முதற்கட்டமாக முடியவில்லை என்றால் 9ஆம் தேதி ஓலை அனுப்புவார்கள்.
உங்க அம்மா யாரு உங்க அப்பா யாரு உங்க தாத்தா எங்க இருக்காரு எங்கேந்து வந்தாருனு என பல தகவல்கள் கேட்பார்கள். இதனை பார்த்து பயந்து விடாதீர்கள். திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் இயக்கத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் இருக்கும் வரை உங்கள் வாக்குகளை நாங்கள் காப்பாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.





















