கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் 14 முதல் இணையவழி தேர்வு - அமைச்சர் பொன்முடி பேட்டி
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்க வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு முதல் பள்ளி, கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் முறையாக செயல்படவில்லை. கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு, கடந்தாண்டு இறுதி முதல் படிப்படியாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளதால் கடந்த சில மாதங்களாக கல்வி நிறுவனங்கள் இயங்கவில்லை. பள்ளிகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் பிப்ரவரி இறுதி முதல் பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது. வழக்கமாக, கல்வியாண்டு ஜூன் அல்லது ஜூலையில் தொடங்கும் என்பதால் உயர்கல்வி செல்லும் மாணவர்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கல்வியாளர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகங்களில் இணைய வழி மூலம் தேர்வுகள் நடத்துவது குறித்து உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இன்று அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனும் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். பின்னர், அமைச்சர் பொன்முடி நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, “அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2017 ரெகுலேஷன்படி, இளங்கலைப் படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் வரும் ஜூன் 14-ஆம் தேதி இணைய வழி மூலம் தொடங்கப்பட்டு நடத்தப்படும்.
2013 ரெகுலேஷனில் எழுதிய இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான தேர்வும் ஜூன் 14-ஆம் தேதி தொடங்கப்படும். மற்ற ரெகுலேஷன் மாணவர்கள் தேர்வு ஜூன் 21ம் தொடங்குகிறது. ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வுக்காக பணம் கட்ட தேவை இல்லை. பணம் கட்டாமல் இருந்த மாணவர்கள் இன்று முதல் 3 தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்தி தேர்வில் கலந்துகொள்ளலாம்
மற்ற பல்கலைக்கழங்கலில் மாணவர்களுக்கான தேர்வுகளை ஜூன்15-ந் தேதி தொடங்கி வரும் ஜூலை 15ல் முடிக்கும் வகையில் முடிவு செய்துள்ளோம். மேலும், தேர்வு முடிவுகளை ஜூலை 30ம் தேதிக்குள் அறிவிக்கவும் முடிவு செய்துள்ளோம் . கொரோனா ஊரடங்கு காரணமாக, கல்லூரி பேராசிரியர்களுக்கு ஊதியம் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை” என்று கூறினார்.
உயர்கல்வித்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை தயாரிக்கும் பணிவிரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுதவிர, தமிழகத்தில் கட்டாயம் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டு அது குறித்த உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.