’ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறுகிய காலத்தில் கிடைத்த இன்ப அதிர்ச்சி’ – அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன்
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றிருப்பது தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த குறுகிய காலத்தில் கிடைத்த வெற்றி இன்ப அதிர்ச்சி அளிக்கிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர புகைப்பட கண்காட்சி அரங்கு திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சி அரங்கினை தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் திறந்து வைத்தார். பின்னர் சர்வேதச பேரிடர் இன்னல் குறைப்பு தின நிகழ்வினை துவக்கி வைத்த அவர், பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை நேரில் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நீதிமன்ற உத்திரவு படி போலி பத்திரிகையாளர்களை கட்டுப்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட இருக்கின்றது. 90 நாட்களுக்குள் இந்த குழு அமைக்க உத்திரவிடப்பட்டு உள்ளது.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றிருப்பது தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த குறுகிய காலத்தில் கிடைத்த வெற்றி இன்ப அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி முழுக்க முழுக்க முதல்வரின் நலத் திட்ட உதவிகளுக்கு கிடைத்த வெற்றி. பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் உரிய முறையில் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் குறித்து நீதிமன்ற உத்திரவு படி அமைக்க இருக்கும் தனிநபர் ஆணையத்தின் மூலம் பத்திரிகையாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தனி நபர் ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
90 நாட்களுக்குள் ஆணையம் அமைக்க உத்திரவிடப்பட்டு இருக்கும் நிலையில் 40 நாட்கள் மட்டுமே முடிந்து இருக்கின்றது. ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என அவர் தெரிவித்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சியின் போது கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா, செய்தித் துறை இயக்குனர் ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியுள்ளது. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது தி.மு.க. அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.