TN Free Bus For Ladies: 'ஓசி பஸ்' சர்ச்சை- கருத்துக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் பொன்முடி
மகளிருக்கான இலவச பேருந்துப் பயணத்தை 'ஓசி பஸ்' என்று கூறியது சர்ச்சையான நிலையில், தான் பேசியதற்கு அமைச்சர் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
மகளிருக்கான இலவச பேருந்துப் பயணத்தை 'ஓசி பஸ்' என்று கூறியது சர்ச்சையான நிலையில், தான் பேசியதற்கு அமைச்சர் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "உங்கள் குடும்ப அட்டைக்கு முதல்வர் ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்கள்தானே? வாயைத் திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படிச் செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலோ, வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில்தானே போகிறீர்கள்" என்று தெரிவித்திருந்தார்.
தலைவர்கள், மக்கள் கண்டனம்
அமைச்சர் பொன்முடியின் இலவசப் பேருந்து பயணம் குறித்த பேச்சுக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் எதிர்வினை ஆற்றினர். பொதுமக்களிடம் இதுகுறித்து ஊடகங்கள் எடுத்த கருத்துக் கேட்பும் வைரல் ஆனது.
அண்மையில் கோயம்புத்தூரில் ஒரு மூதாட்டி, "ஓசி பயணம் வேண்டாம், டிக்கெட் கொடுங்க" என்று பேருந்தில் முரண்டு பிடித்ததும் பேசுபொருள் ஆனது. இந்நிலையில் தான் பேசியதற்கு அமைச்சர் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திமுக தலைவராக ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில் விழாக் கூட்டம் நேற்று (அக்.12) இரவு பெற்றது.
ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு என்னை என்னென்ன செய்தார்கள்?
அதில் கலந்து கொண்டு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "இங்கு இவ்வளவு சகோதரிகள் வந்திருக்கிறீர்கள். என்னுடன் உங்களுடன் பேசுவதற்குக் கூட தயக்கமாக உள்ளது. ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு என்னை என்னென்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். அதற்குக் கூட எங்களுடைய முதலமைச்சர் இதெல்லாம் எதற்கு? வேண்டாம் என்று எனக்கு அறிவுரையை வழங்கினார்.
சகோதரிகளே, நீங்கள் எல்லாம் நான் பேசியதை மகிழ்வுடன்தான் ஏற்றுக் கொண்டீர்கள். நீங்கள் சொன்ன வார்த்தையைத்தான் நான் திருப்பிச் சொன்னேன். எல்லோருக்கும் ஏதாவது ஒன்றை வைத்து விமர்சிக்க வேண்டும். எனக்கு அந்த வார்த்தையை வைத்து, பேசிக்கொண்டு இருந்தார்கள். இதனால் யாருடைய மனதால் புண்பட்டிருந்தால், உண்மையிலேயே நான் வருந்துகிறேன். யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல, அவ்வாறு நான் பேசவில்லை. கலோக்கியலாகப் பேசிய வார்த்தைதான் அது" என்று அமைச்சர் பொன்மொழி தெரிவித்தார்.
*
2021ல் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மாநகர மற்றும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற தங்களின் தேர்தல் பரப்புரை வாக்குறுதிகளில் ஒன்றினை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் பல பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.
ஆனால் இந்த திட்டம் சாதாரண நகரப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சரியாக அறியாமல் டீலக்ஸ், எலக்ட்ரிக் போர்டு மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ஏறி பெண்கள் பணம் செலவழித்து பயணம் செய்ய வேண்டிய சூழல் நிலவியது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கக் கூடிய பேருந்துகள் பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.