(Source: ECI/ABP News/ABP Majha)
Minister Gandhi: "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களைப் பார்த்து சிரிப்பது கூட இல்லை..." - அமைச்சர் காந்தி ஏன் அப்படி சொன்னார்..?
கடந்த ஆட்சியில் நெசவு தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தாமல் இருந்தார்கள். திமுக ஆட்சி வந்த உடன் 10 சதவீதம் உயர்த்தப்பட்டது.
சேலம் மாநகர் கடை வீதியில் உள்ள கோ ஆப்டெக்ஸை சீரமைப்பு பணியினை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார். கோ ஆப்டெக்ஸ் கடை ஊழியர்களிடம் அமைச்சர் காந்தி விற்பனை குறித்து கேட்டறிந்தார். பின்னர் சீரமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்த அவர், கோ ஆப்டெக்ஸ்டைல் செய்யப்படவுள்ள பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
மேலும் முதல்வர் அடுத்த மாதம் 11ம் தேதி வருவதற்குள்ளாக பணிகளை திறந்து முடிக்கவும் அதிகாரிகளிடம் கூறினார். ஆய்வின் போது சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் கைத்தறி மற்றும் நூல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி,
"தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனே முதல் ஆண்டு லாபம் ஈட்டப்பட்டது. அதன்பின்னர் விற்பனையே பெருக்குவதற்காக கோ ஆப்டெக்ஸை வளர்ப்பதற்காக தனிக்குழு போடப்பட்டது. ஊழியர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டது. தரமான முறையில் ஜவுளிகள் தயாரிக்கப்பட்டதால் 20 கோடி லாபம் ஈட்டப்பட்டது. தமிழகத்தில் 145 இடங்களில் கோ ஆப்டெக்ஸ் மையங்கள் உள்ளது இதில் 49 கடைகள் வெளிமாநிலங்களில் உள்ளது. தமிழகத்தில் 45 கடைகள் புதிதாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மக்களை பற்றிய சிந்தனை:
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள். நிதித்துறையை எந்த அளவிற்கு வைத்து சென்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் தமிழக முதல்வர் செய்வது சாதாரண விஷயம் அல்ல. தமிழக முதல்வர் எங்களைப் பார்த்து சிரிப்பது இல்லை. எப்பொழுதும் மக்களை பற்றி யோசனையில் உள்ளார். மக்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார். அந்த அளவிற்கு முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறார்.
கடந்த ஆட்சியில் நெசவு தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தாமல் இருந்தார்கள். திமுக ஆட்சி வந்த உடன் 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நிரந்தர தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்துள்ளதாக தெரிவித்தார். கோ ஆப்டெக்ஸ்சில் விலை கூடுதலாக இருப்பதாக கூறுவது தவறான தகவல் கோ ஆப்டெக்ஸ் வாங்கும் தரம் வேறு மற்ற இடங்களில் தரம் வேறு. பொங்கல் பண்டிகையின் போது பட்டிருக்கு 30 சதவீதம் தள்ளுபடி கொடுப்பதாகவும் கூறுகிறார். இந்தியாவிலேயே குஜராத்திற்கு பிறகு தமிழகம் இரண்டாவது இடம் என்று கூறிய நிலையில் தற்போது தமிழகத்தை குஜராத்தை மிஞ்சும் அளவிற்கு முன்னேற்றத்தை தமிழக முதல்வர் கொண்டுவந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.