Duraimurugan : ”நான் ஜனாதிபதி இல்லப்பா!” - நையாண்டியாக பதில் சொன்ன அமைச்சர் துரைமுருகன்
வேலூரில் காவல்துறை கண்காணிப்பு அறையைத் திறந்து வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
இந்திய ஜனாதிபதிக்கான தேர்தல் வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என்றும் தேர்தலில் திமுக யாருக்கு ஆதரவு என்பதும் விரைவில் தெரிவிக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் காவல்துறை கண்காணிப்பு அறையைத் திறந்து வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்வுக்குப் பிறகு குடியரசுத் தலைவருக்கான தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,''சத்தியமா நான் குடியரசுத் தலைவர் வேட்பாளர் கிடையாதுங்க, நான் போட்டியிடவில்லை'' என்று நகைச்சுவையுடன் கூறினார். மேலும் தேர்தலில் திமுக யாருக்கு ஆதரவு என்பது விரைவில் தெரியவரும் என்றும் அதற்கு இன்னும் நேரம் இருப்பதாகவும் அவர் கூறினார். குடியரசுத் தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் சக்தியாக கருணாநிதி இருந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.
நிகழ்வில் மேலும் பல கேள்விகளும் அவரிடம் கேட்கப்பட்டது. வேலூரில் விசுவாசி ஒருவர் எம்.ஜி.ஆர்.க்கு கோயில் கட்டுவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் நடிகர்கள் குஷ்பு உள்ளிட்டவர்களுக்கே இங்கே கோவில் கட்டியபோது எம்.ஜி.ஆர்.க்கு கோவில் கட்டுவதில் தவறில்லை என பதிலளித்தார். காட்பாடியில் தனிநபர் ஒருவர் எம்.ஜி.ஆர்.க்கு கோவில் கட்டுவதை அடுத்து இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த அவர், ''ஏங்க தமிழ்நாட்டில் குஷ்புவுக்கு எல்லாம் கோவில் கட்டியிருக்கிற போது எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டுவதில் என்ன தவறிருக்கிறது'' எனக் கேள்வி எழுப்பினார்.
கல்லூரியில் துரைமுருகன் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவருக்கு நிறைய உதவிகளைச் செய்து உடனிருந்தவர் எம்.ஜி.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்துப் பேசிய துரைமுருகன், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வருபவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும்படியும் ‘அவரைத் தெரியும் இவரைத் தெரியும்’ என சிபாரிசுடன் வந்தாலும் அவர்களை விட்டுவிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். உயிர் தொடர்பான விவகாரத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என அவர் கூறினார்.
முன்னதாகக் கடந்த மாதம், வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளிமலை கிராமத்தில் மேல்பாடி ஊராட்சியின் கிராம சபா கூட்டம் ஊராட்சி தலைவர் நித்யானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ,காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் . இதில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி விழாவில் பேசினார்.
நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, “வழக்குகள் உள்ளூர் மொழியில் நடத்த வேண்டும் என்பது திமுகவின் நீண்ட நாள் கொள்கை. இப்போது தான் பிரதமர் கூறியிருக்கிறார். அதனை பிரதமர் நிறைவேற்ற வேண்டும். இலங்கை தமிழர்கள் உண்ண உணவின்றி உடையின்றி தப்பி வருகின்றனர். எப்போதுதான் மத்திய அரசு அவர்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறது.
தமிழக அனைத்து கட்சிகளும் இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு அவர்களுக்கு உரிய அங்கிகாரம் அளிக்க வேண்டுமென கூறியும் மௌனம் காக்கிறது. ஆனால் வட இந்தியருக்கு பாதிப்பு என்றால் இவ்வாறு இருந்திருப்பார்களா..? “ என்றார்