Duraimurugan Apology: அந்த பயம் இருக்கட்டும்.. மாற்றுத்திறனாளிகள் பற்றிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த துரைமுருகன்...
சர்ச்சையான பேச்சுக்காக, அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.

சமீபத்தில், பொதுக்கூட்ட மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, பட்டை மற்றும் நாமத்தை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதற்காக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொன்முடி வகித்துவந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் குறித்த தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் என்ன கூறியுள்ளார் துரைமுருகன்.?
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கையிலேயே உடலில் குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு அழைத்து வந்ததை, முத்தமிழறிஞர் கலைஞர் கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்"" என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அப்படிப்பட்ட தானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டதாக, திமுக தலைவர் தன் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, தான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். கலைஞரால் வளர்க்கப்பட்ட தானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும் என கூறியுள்ள அவர், மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும் எனவும், அதற்காக தன் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
திமுக தலைவர் எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது தனக்குத் தெரியும் என்றும் அவருக்கும் தன் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று தான் உறுதி அளிப்பதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் துரைமுருகன்.
பதவி போய்விடுமோ என்ற பயத்தில் அறிக்கையா.?
சர்ச்சையாக பேசியதால் திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடியின் பதவி பறிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, துரைமுருகன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டள்ளார். இதனால், எங்கே தனக்கும் பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அவர் இவ்வாறு செய்துள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.
பொதுவாக வேறு எதற்குமே பயப்படாமல், தன் வாய்க்கு வந்ததை பேசும் அமைச்சர் துரைமுருகன், பதவி என்று வரும்போது, அதை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் பயப்படத்தான் செய்கிறார் என்றும், அதனால் தான், அறிக்கை விட்டு, தன் பதவியை காப்பாற்ற முயற்சித்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.





















