தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்- பள்ளியில் விசாரணையை தொடங்கிய சிபிஐ
இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ இணை இயக்குநர் வித்யா குல்கர்னி தலைமையில், தடயவியல் நிபுணர்கள் என 14 பேர் கொண்ட குழுவினர் மாணவி படித்த பள்ளி மற்றும் விடுதிக்கு வந்தனர்.
தஞ்சாவூர் ப்ளஸ் 2 மாணவி தற்கொலை விவகாரம் குறித்து, சிபிஐ அதிகாரிகள் பள்ளியில் விசாரணையை துவக்கினர். அரியலுார் மாவட்டம், வடுகபாளையத்தைச் சேர்ந்த, 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி ப்ளஸ் 2 படித்து வந்தார். இவர், விடுதியில் தங்கியிருந்த போது கடந்த ஜனவரி 9 ஆம் தேதி பூச்சிமருந்து குடித்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஜனவரி 19 ஆம் தேதி இறந்தார்.
விடுதி வார்டன் சாகயமேரி தன்னை, விடுதியில் அறையை சுத்தம் செய்ய சொன்னதாலும், வரவு செலவு கணக்குகளை எழுத சொல்லி வார்டன் திட்டியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக விடுதி வார்டன் சகாயமேரி மீது மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருக்காட்டுப்பள்ளி போலீஸார் கைது செய்தனர். தற்போது அவர், ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையில் ஜனவரி 17 ஆம் தேதி, மாணவி சிகிச்சையில் இருந்தபோது, முத்துவேல் என்பவர் எடுத்த வீடியோவில், "தன்னை மதம் மாற பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்தியதாக கூறிய" வீடியோ வெளியானது. இந்த செல்போன் வீடியோ பதிவு டிஎஸ்பி பிருந்தா விடம், ஒப்படைக்கப்பட்டது.
மேலும், பள்ளி நிர்வாகிகள் மதம் மாற வற்புறுத்தியதால் தான், தன் மகள் தற்கொலை செய்து கொண்டார் என, மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவி தற்கொலை வழக்கை, சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, சென்னை சிபிஐ அதிகாரிகள், மாணவி தற்கொலை விவகாரத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவரை தற்கொலைக்கு துாண்டுதல் உட்பட நான்கு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ இணை இயக்குநர் வித்யா குல்கர்னி தலைமையில், கண்காணிப்பாளர் நிர்மலாதேவி, டிஎஸ்பிக்கள் ரவி, சந்தோஷ் மற்றும் தடயவியல் நிபுணர்கள் என 14 பேர் கொண்ட குழுவினர், இன்று மதியம் 12.20 மணிக்கு மாணவி படித்த பள்ளி மற்றும் விடுதிக்கு வந்தனர்.
அங்கு முதலில் திசைக்காட்டும் கருவியை கொண்டு அதன்படி பள்ளி வகுப்பறை, மற்றும் மாணவி தங்கியிருந்த அறை, ஆசிரியர்கள் தங்கும் அறை, கன்னியாஸ்திரிகள் தங்கும் அறை என அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர். மேலும் இதனை புகைப்படங்களாகவும், வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். அதே போல் பள்ளி நிர்வாகத்தில் உள்ளவர்களிடமும் விசாரணையை நடத்தி அதனை பதிவு செய்து கொண்டனர்.