Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிரடி சரிவு... பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறப்பு.
மேட்டூர் அணையின் நீர்வரத்து 2,938 கன அடியில் இருந்து 2,886 கன அடியாக குறைந்தது.
தமிழகத்தில் பருவமழை பெய்து வரும் நிலையில் , காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: PMK Manadu: கொடுங்கோல் ஆட்சி.. கோபத்தில் மக்கள்.. கொதித்தெழுந்த அன்புமணி!
இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 3,004 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 2,938 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 2,886 கன அடியாக குறைந்துள்ளது.
நீர்மட்டம்:
அணையின் நீர்மட்டம் 119.22 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 92.23 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும்.
மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க; GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகள்:
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது.