மேலும் அறிய
Advertisement
சிதலமடைந்த நாதஸ்வர ஜாம்பவான் காருகுறிச்சி அருணாச்சலத்தின் நினைவிடம்...!
’’மறைந்த முன்னாள் பிரதமர் நேரு, முன்னாள் முதல்வர் காமராஜர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் காருகுறிச்சி அருணாச்சலத்தின் இசைக்கு ரசிகர்களாய் இருந்துள்ளனர்’’
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நாதஸ்வர இசை மேதை காருகுறிச்சி அருணாசலத்தின் நினைவிடம் போதிய பரமரிப்ப இல்லமால் சேதமடைந்து இருப்பதால் தமிழ் அறிஞர்களும், இசைக்கலைஞர்களும் வேதனையில் உள்ளனர். அவருடைய நூற்றாண்டு விழாக்காலம் என்பதால் நினைவிடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைப்பது மட்டுமின்றி, கோவில்பட்டியில் இசைப்பள்ளியும் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.
1962 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில், ஒரு காட்சியில் நடிகை சாவித்திரி பாடல் ஒன்றை பாடத் தொடங்குவார். அப்போது அங்கே வரும் ஜெமினி கணேசன் காதலுடன் கொஞ்சும் மொழியில், “சாந்தா ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய், உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா” என்று கசிந்துருகுவார்.
’’சிங்கார வேலனே தேவா...’’ என்ற அந்த பாடலை காலம் கடந்தும் இன்றைக்கும் பேசக் காரணம் பின்னணியில் இருந்த காருகுறிச்சி அருணாசலம் என்கிற இசை மேதையின் நாதஸ்வர இசை. சாமான்ய மனிதனையும் சங்கீத ஞானம் உள்ளவர்களாக மாற்றிய பெருமை காருகுறிச்சியாரின் நாயனத்திற்கு உண்டு.
நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் போகிற வழியில் காணப்படும் சிறிய கிராமம் காருகுறிச்சி. 1921ஆம் ஆண்டு அங்கு பிறந்த அருணாசலத்திற்கு சிறுவயதிலேயே நாதஸ்வரம் வாசிக்கும் நுட்பம் எளிதாக கைகூடியது. நாதஸ்வரன் சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினத்தின் மானசீக சிஷ்யனான திகழ்ந்தார். மறைந்த முன்னாள் பிரதமர் நேரு, முன்னாள் முதல்வர் காமராஜர் ஆகியோர் காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசைக்கு ரசிகர்களாக இருந்துள்ளனர். அது மட்டுமல்லது நடிகர் திலகம் சிவாஜிகணேசன், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஜெமினிகணேசன் என திரைக் கலைஞர்களுடனும் நல்ல நட்பில் இருந்தவர் காருகுறிச்சி அருணாசலம்
தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் நாதஸ்வர இசையினால் பல மணி நேரம் மக்களை கட்டுக்குள் வைத்திருந்த காருகுறிச்சி அருணாச்சலம் பிறந்தது காருகுறிச்சியாக இருந்தாலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராமலட்சுமி என்பவரை திருமணம் செய்த பிறகு பெரும்பாலும் அவர் வாழ்க்கை கோவில்பட்டியிலேயே கழிந்தது. தனது இறுதி காலத்தினையும் கோவில்பட்டியில் வாழ்ந்து 1964ஆம் ஆண்டில் மறைந்தார்.
நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாச்சலத்தின் உடல் அரசு மரியாதையுடன் கோவில்பட்டி கடலையூர் சாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருடைய நினைவிடம் அங்கு உள்ளது. காருகுறிச்சியாரை ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்கும் மிகவும் பிடிக்கும். இதன்காரணமாக, கோவில்பட்டி புது ரோட்டில் அரசு மருத்துவமனைக்கு எதிராக அவர்களின் சொந்த செலவில் காருகுறிச்சி அருணாசலம் சிலை அமைத்து திறந்து வைத்தார்கள்.
காருகுறிச்சி அருணாசலம் மறைவுக்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அறிஞர்கள், இசைக்கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் நாளடைவைவில் அவை நடைபெறவில்லை. வெளியூரில் இருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டும் தற்பொழுது வரை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் அவரது நினைவிடம் போதிய பரமரிப்பு இல்லமால் முற்றிலுமாக சேதமடைந்து காணப்படுகிறது. நினைவிட சுவர் பகுதிகள் ஆங்கங்கே பெயர்ந்து உள்ளது மட்டுமின்றி, சுற்றுச்சுவர் எப்போது விழும் என்ற நிலையில் உள்ளது. தற்பொழுது வரை நினைவிடத்திற்கு மின் இணைப்பு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள சிலையும் போதிய பரமரிப்பு இல்லமால் உள்ளது.
எந்த இசை வந்தாலும் நாதஸ்வர இசைக்கு இன்றைக்கும் மவுசு குறையவில்லை. இடைவிடாது 3 மணி நேரம் மக்களை நாதஸ்வர இசையினால் கட்டிப்போடும் வல்லமை படைத்தவர் நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாச்சலம். காருக்குறிச்சியில் பிறந்து இருந்தாலும், வாழ்ந்து மறைந்தது கோவில்பட்டியில்தான் என்பதால் கோவில்பட்டி மக்களுக்கு மிகப்பெரிய பெருமை. காருகுறிச்சியாரின் நூற்றாண்டு காலகட்டத்தில் அரசு நினைவிடத்தினை புதுப்பிக்க வேண்டும், எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு, இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த நாதஸ்வர வித்தவானுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இசைப்பள்ளி அமைப்பது மட்டுமின்றி, அடுத்து வரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்கின்றனர் கோவில்பட்டி பகுதிமக்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion