![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
வாழ்ந்தா இவங்கள மாதிரி வாழனும்...! சொகுசு வாகனம் மூலம் 91 நாடுகளை சுற்றிய ஜெர்மன் தம்பதி மாமல்லபுரம் வருகை
நவீன வாகனத்துடன் மும்பை துறைமுகம் வந்திறங்கிய இத்தம்பதியினர் சுற்றுலா விசா மூலம் அங்கிருந்து தங்கள் சொகுசு வாகனம் மூலம் மாமல்லபுரம் வந்துள்ளனர்
![வாழ்ந்தா இவங்கள மாதிரி வாழனும்...! சொகுசு வாகனம் மூலம் 91 நாடுகளை சுற்றிய ஜெர்மன் தம்பதி மாமல்லபுரம் வருகை Meet the German couple whove been travelling in a Mercedes truck for 12 years now in india tamil nadu mammalapuram வாழ்ந்தா இவங்கள மாதிரி வாழனும்...! சொகுசு வாகனம் மூலம் 91 நாடுகளை சுற்றிய ஜெர்மன் தம்பதி மாமல்லபுரம் வருகை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/28/8ec6cfd185af1bdbc0cf7def46a6c3d7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜெர்மன் நாட்டில் உள்ள பெர்லின் நகரை சேர்ந்தவர் தோல்பன் (39), இவர் அந்நாட்டில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது மனைவி மிகி (36), ஜெர்மன் நாட்டில் எழுத்தாளராக உள்ளார். இந்த தம்பதியினர் கடந்த 12 வருடமாக ஆஸ்திரியா, இத்தாலி, குரோசியா, அல்போனியா, கிரீஸ், இஸ்ரேல், இங்கிலாந்து, நார்வே, நியூசிலாந்து, தென் ஆப்பரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை, சுவிட்சர்லாந்து, ஜோர்டன், தென் அரேபியா, ஓமன், எமிரேட்ஸ், துபாய் உள்ளிட்ட 91 நாடுகள் சுற்றி தற்போது இந்தியா வந்துள்ளனர்.
இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. உலகம் சுற்றி வரும் இத்தம்பதியினர் கடைசியாக துபாய் வந்து அங்கிருந்து கப்பல் மூலமாக மும்பை வந்தனர். தங்கள் நவீன வாகனத்துடன் மும்பை துறைமுகம் வந்திறங்கிய இத்தம்பதியினர் சுற்றுலா விசா மூலம் அங்கிருந்து தங்கள் சொகுசு வாகனம் மூலம் மாமல்லபுரம் வந்துள்ளனர். மெர்சிடிஸ் பென்ஸ் கார் வகையை சேர்ந்த இந்த நவீன வாகனத்தில் படுக்கை வசதி, சமையல் அறை வசதி, கழிப்பிட, குளியலறை வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட சொகுசு வாகனமாகும். கடற்கரை தாண்டி உள்ள நாடுகளுக்கு சிறப்பு விசா பெற்று கப்பல் மூலம் இந்த வாகனத்தை எடுத்து செல்லும் இந்த தம்பதியினர் பின்னர் அந்நாடுகளில் சாலை மார்க்கமாக இந்த வாகனத்தில் சுற்றி பார்க்க செல்கின்றனர்.
இந்த நவீன வாகனத்தை என்ஜீனியர் தோல்பனே ஓட்டுகிறார். இவர்கள் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிடுவதில்லை. அவரது மனைவி மிகி சமையல் செய்து தருகிறார். அதனை தோல்பனும், அவரது குழந்தையும் சாப்பிடுகின்றனர். நவீன வாகனத்தில் மாமல்லபுரம் வந்துள்ள தோல்பனும், அவரது மனைவியும் கடற்கரை கோயில் நுழைவு வாயிலில் அந்த வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றி பார்க்க சென்றபோது, அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் அந்த நவீன சொகுசு வாகனத்தை ஆச்சர்யமாக பார்த்துவிட்டு செல்வதை காண முடிந்தது. மலை பிரதேசம், கரடுமுரடான பாதைகளில் பயணிக்கும் வசதியுடன் இந்த வாகனத்தில் டயர்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
மெக்கானிக் பயிற்சி பெற்றிருக்கும் தோல்பன் இந்த வாகனம் எங்கேயாவது நின்றுவிட்டால் தானே ஒரு மெக்கானிக்காக மாறி சரி செய்து கொள்கிறார். டயர்கள் பஞ்சரானால் அதனை கழட்டி வேறு டயல் மாற்ற கூடுதல் டயர்கள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். 1000 லிட்டர் டீசல் வசதி கொள்ளளவு கொண்ட டாங்க் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சோலார் வசதி பொருத்தப்பட்டுள்ளதால் அதன் மூலம் மின்சார வசதி பெற்று மின்விசிறி, மின் விளக்கு, குளிர் சாதன வசதி, பிரிஜ் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கிறார். சிறிய சொகுசு வீடு போன்ற வசதி கொண்ட இந்த வாகனத்தில் அடுத்து மேற்கு வங்காளம், ஒரிசா, குஜராத் செல்ல விருப்பதாகவும் ஜெர்மன் தம்பதியினர் தெரிவித்தனர். நடமாடும் சொகுசு வீடு வாகனம் மாமல்லபுரம் முக்கிய புராதன மையங்களுக்கு சென்றபோது பொதுமக்கள் பலர் அதனை வியப்புடன் பார்த்து செல்வதை காண முடிந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)