கொள்ளிடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி - படகில் சென்று பார்வையிட்ட அமைச்சர் மெய்யநாதன்
கொள்ளிடம் ஆற்றின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை படகில் சென்று அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்று படுகை கிராமங்களான வெள்ளைமணல், முதலைமேடு திட்டு, நாதல் படுகை கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட சோலம், கம்பு, கிழங்கு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை சுற்றி தண்ணீர் சூழ்ந்து பாதிப்படைந்து வருகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட கண்காணிப்பாளர் நிஷா உள்ளிட்டோர் இரண்டு நாட்களாக பார்வையிட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக நாதல்படுகை கிராமத்திற்கு சென்ற அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் படகில் சென்று பாதிக்கப்பட்ட வீடுகள், விவாசாய விளைநிலங்களை பார்வையிட்டனர்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், மேட்டூர் அணையில் நேற்று முன்தினம் இருந்து திறக்கப்பட்ட உபநீர் கல்லணை வழியாக 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி நீர் தற்பொழுது கொள்ளிடம் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளது. நேற்றிலிருந்து இரண்டு நாட்களாக நானும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் முதலைமேடுதிட்டு, நாதல் படுகை, வெள்ளை மணல் உள்ளிட்ட திட்டு கிராமங்களுக்கு நேரில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். முதலைமேடுதிட்டு, நாதல் படுகை கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதை படகு மூலம் சென்று நேரில் பார்வையிட்டு வந்துள்ளோம்.
எதிர்காலத்தில் இது போன்ற சூழல் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கால்நடை மருத்துவ முகாம், கால்நடைகளுக்கு தேவையான உணவு, மருத்துவ முகாம்கள், பாதுகாப்பு முகாம்கள் உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும், எதிர்காலத்தில் கால்நடை மற்றும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வருங்காலங்களில் பேரிடர் காலங்களில் நாதல்படுகை கிராம மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு புதிதாக பாதுகாப்பு மையங்களை இதே பகுதியில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேளாண் துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் பார்வைக்கு எடுத்துச் சென்று உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கொள்ளிடம் ஆற்றுப் படுகை கிராமங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியே வீடு கட்டி தங்க விருப்பப்பட்டால் அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்