Cyclone Michaung: புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல்.. உதவ முன்வந்த சர்ச் மற்றும் மசூதி.. வென்ற மனிதநேயம்..!
வீடுகளில் தண்ணீர் புகுந்து தங்குவதற்கு வழி இல்லாமல் தவிக்கும் அப்பகுதி மக்களுக்கு உதவுவதற்கு குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி நிர்வாகம் உதவ முன்வந்துள்ளது.
வீடுகளில் தண்ணீர் புகுந்து தங்குவதற்கு வழி இல்லாமல் தவிக்கும் அப்பகுதி மக்களுக்கு உதவுவதற்கு பலரும் முன்வந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புயல்:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மிக்ஜாம் புயல் தற்போது சென்னையிலிருந்து வடகிழக்கு திசையில் 100 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு தென்கிழக்கு திசையில் 120 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைவிட்டு விலகிச்செல்லும் மிக்ஜாம் புயல், தற்போது ஆந்திராவின் நெல்லூர் நோக்கி நகர்ந்து வருவதாகவும், மிக்ஜாம் புயலானது நாளை முற்பகலில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே பாபட்லா அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகமானது 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து மிக்ஜாம் புயல் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
அதேநேரம். இந்த புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் பெய்துள்ள இந்த மழையில் நகரமே திண்டாடி வரும் சூழலில், பல்வேறு இடங்களில் மின்சாரமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகளும் முடங்கிபோய் உள்ளது. பல்வேறு பகுதிகளிலும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை கட்சியினர் வழங்கி வருகின்றனர்.
பள்ளி வளகத்தில் தங்கலாம்:
இந்நிலையில், வீடுகளில் தண்ணீர் புகுந்து தங்குவதற்கு வழி இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்கு குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி நிர்வாகம் உதவ முன்வந்துள்ளது. அதேபோல், குரோம்பேட்டை பகுதி மக்கள் எவருக்காவது இரவு தங்க உதவி தேவைப்பட்டால் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி வளாகத்தில் தங்கலாம் என்றும் அமல அன்னை ஆலயத்தில் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
மேலும், சென்னை லயோலா கல்லூரி நிர்வாகம், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கல்லூரியில் வந்து தங்கிக்கொள்ளால் என்றும் தொடர்பு கொள்வதற்கு 9444053063 என்ற எண்ணையும் கொடுத்துள்ளனர். மேலும், பாலவாக்கம் கரீம் நகர் பள்ளிவாசலும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மழை நீர் புகுந்து தங்க முடியாதவர்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.