CM Stalin: ”சென்னை அனுபவத்தின் மூலம் தென்மாவட்ட மக்களை மீட்போம்” - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
CM Stalin: சென்னை அனுபவத்தின் மூலம் தென்மாவட்ட மக்களை மீட்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்பு மக்களிடமிருந்து மனுக்களை பெற்றதோடு, குறகளையும் கேட்டறிந்தார்.
”மக்களுடன் முதல்வர் திட்டம்”
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “மக்களுடன் முதல்வர் என்ற மகத்தான் திட்டத்தை தொடங்கி வைத்து இருக்கிறேன். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்தது. அதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், மழைக்கு பிறகு போர்க்கால அடிப்படையிலும் செயல்பட்டு அரசு அதனை எதிர்கொண்டது. ஒருநாள் முழுக்க பெய்தது. மழை நின்றதுமே நிவாரணப் பணிகளை தொடங்கினோம். மறுநாள் காலையிலேயே முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீரடைந்தது. பெரும்பாலான பகுதிகளில் 3 நாட்களில் மின் இணைப்பு மீண்டும் கிடைத்தது. புறநகர் பகுதிகளில் ஒருசில பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. மாவட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் அறிவித்து, திட்டத்தையும் தொடக்கி வைத்தேன்.
”தென்மாவட்ட மக்களை மீட்போம்”
இதற்கிடையே தென்மாவட்டங்களிலும் இரண்டு நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. அரசு இயந்திரம் முழுமையாக தென்மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு வரை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உடன் பேசிக்கொண்டிருந்தேன். சென்னையில் செயல்பட்டதை போன்றும், அந்த அனுபவத்தை கொண்டும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு தென்மாவட்ட மக்களை காப்போம். இது உறுதி.
”மக்களுடன் முதல்வர் திட்டத்தின் நோக்கம்”
முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மகளிர் உரிமை திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்தும் போன்றவை திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டங்கள் ஆகும். அனைத்து தரப்பினரின் பாதுகாவலானாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திட்டங்கள் கடைகோடி மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், கள ஆய்வில் முதலமைச்சர் எனும் திட்டத்தை தொடங்கி களத்திற்கு சென்று நானே ஆய்வு செய்தேன். அதன் மூலம் பொதுமக்கள் பயனடைவதை பார்க்க முடிகிறது. பெரும்பாலான அடிப்படை சேவைகள் இணையதளம் மூலமே வழங்கப்படுகிறது. மக்கள் அதிகம் அணுகும் 13 அரசு துறைகளின் பெரும்பாலான சேவகள் வழங்கப்படுகிறது. இதில் சில சிரமங்கள் இருப்பதாக அரசுக்கு தெரிய வந்தது. இதனை தீர்க்கும் வகையில் தான் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு சென்று, எல்லா பொதுமக்களுக்கும் எல்லா சேவைகளையும் கிடைக்கச் செய்வது தான் திட்டத்தின் நோக்கம். அதாவது செயல்முறயை விரைவுபடுத்தி, தாமதங்களை குறைப்பது. மாற்று திறனாளிகள், முதியோர்களின் தேவைகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றை தீர்த்து வைப்பதில் இந்த திட்டம் தனி கவனம் செலுத்தும். நகர்ப்புற, கிராமப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், மக்களின் கோரிக்கைகள் மனுக்களாக பெறப்பட்டு, 30 நாட்களில் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் தேவையான சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். இது என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும்.
”இரண்டு கட்டங்களாக முகாம்கள்”
இந்த முகாம்கள் முதற்கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் 740 முகாம்கள் நடத்தப்படும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் வெள்ள நிவாரணப் பணிகள் முடிந்ததும், ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக எல்லாம் மாவட்டங்களிலும் இருக்கும் ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு, முறையான கோரிக்கைகள் நிறவேற்றி தரப்படும். மக்களின் கோரிக்கைகள் மக்களுடன் முதல்வர் திட்டதின் இணையப்பகுதியில் பதிவேற்றப்படும். பொதுமக்கள் இந்த முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி, உரிய சேவைகளை பெற வேண்டும்.
அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்:
இதுதொடர்பான அதிகாரிகளுக்கு உங்களின் முதலமைச்சர் அன்போடு சொல்வது என்னவென்றால், ஒவ்வொரு மனுவிற்கும் முடிவு காண்பது என்பது முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட வேண்டும். அப்போது தான் அரசு மீது ஏழைகள் கொண்டிருக்கும் நம்பிக்கை வலுவடையும். பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் சென்னை கோட்டை நோக்கி வருவதை குறைக்க, மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்ட அளவில் முடிய வேண்டிய பிரச்னையை வட்ட அளவிலும், மாவட்ட அளவில் முடிய வேண்டிய பிரச்னைகளை மாவட்ட அளவிலும் முடிக்க போதிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உரிய முறையில் செயல்பட வேண்டும். மக்களுக்கு பயனில்லாத தற்காலிக பதில்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.