`கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் பெருச்சாளியாகப் பிறப்பார்கள்!’ - சாபம் விட்ட மதுரை ஆதீனம்!
`கோயில் நிலத்தையும், கோயிலுக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய கடனையும் கொடுக்காதவர்கள், அடுத்த ஜென்மத்தில் பெருச்சாளியாகப் பிறப்பார்கள்’ என்று மதுரை ஆதீனம் சாபம் விட்டுள்ளார்.
`கோயில் நிலத்தை வைத்திருந்தாலோ, கோயிலுக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தாமல் இருந்தாலோ கொடுத்து விடுங்கள்; இல்லை எனில் அடுத்த ஜென்மத்தில் பெருச்சாளி, மூஞ்சுறு எலி ஆகியவையாகப் பிறக்க நேரிடும். சிவன் சொத்து, குலநாசம்’ என்று மதுரை ஆதீனம் ஞான சம்பந்த தேசிகாச்சாரியார் சாபம் விட்டுள்ளார். மேலும் அவர் தேசியக் கொடி என்பது சைவக் கொடி என்று கூற, அது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தின் மானாமதுரை அருகில் உள்ள தஞ்சாக்கூரில் ஜெகதீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்போது கோயில் அருகில் யாக சாலை அமைத்து, அதில் புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு, கடந்த டிசம்பர் 9 அன்று யாகப் பூஜைகள் தொடங்கப்பட்டன.
கடந்த டிசம்பர் 10 அன்று, இரண்டாம் கால பூஜை முடிந்து பூர்ணாஹூதியாகி கடம் புறப்பாடு நடைபெற்றது. அங்கு கோயிலின் சிவாச்சாரியார்கள் புனித நீர்க் கலசங்களைச் சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனர்.
அதற்குப் பின், வானத்தில் கழுகு வட்டமிட்ட பிறகு, காலை 10 மணிக்கு கோயிலின் மூலவர் ஜெகதீஸ்வரர் சுவாமியின் விமானக் கலசத்தின் மீது வேத மந்திரங்கள் முழங்க, கலச நீர் ஊற்றி, குட முழுக்கு விழா நடைபெற்றது. தொடர்ந்து கோயில் பரிவாரத் தெய்வங்களுக்கும் குட முழுக்கு விழா நடத்தப்பட்டது.
குட முழுக்கு விழாவைக் கோயிலில் திரண்டிருந்த பல்வேறு பக்தர்களும் கண்டு தரிசித்தனர். பின்பு லிங்க வடிவிலான ஜெகதீஸ்வரர் சுவாமிக்கும் திரிபுர சுந்தரி அம்பாளுக்கும், பிற பரிவார தெய்வங்களுக்கும் கலச நீரால் அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடத்தப்பட்டன..
திருக் குட நன்னீராட்டு விழாவில் தற்போதைய மதுரை ஆதீனமான ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைச் செயலாளர் ஜெ.ஜெயகாந்தன் முதலானோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கோயிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அப்போது சொற்பொழிவில் பேசிய மதுரை ஆதினம், ‘தேசிய கொடி சைவ மதத்தைச் சேர்ந்த கொடி. அதிலுள்ள பச்சை நிறம் அம்பாளைக் குறிக்கிறது; சிவப்பு நிறம் செம்மேனி அம்மாளின் நிறத்தைக் குறிக்கிறது; வெள்ளை நிறம் ரிஷபத்தைக் குறிக்கிறது. அதனால் தேசியக் கொடி என்பது சைவக் கொடியே ஆகும். அது மட்டுமல்லாமல் கோயில் நிலத்தை வைத்திருந்தாலோ, கோயிலுக்குச் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தாமல் இருந்தாலோ, அதனை விரைவில் கொடுத்து விடுங்கள். இல்லை எனில், அடுத்த ஜென்மத்தில் பெருச்சாளி, மூஞ்சுறு எலி ஆகியவையாகப் பிறக்க நேரிடும்; சிவன் சொத்து குலநாசம்’ என்று சாபம் விடும் தொனியில் பேசியுள்ளார்.
புதிய மதுரை ஆதினத்தின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.