கலையரங்கம் கட்ட திட்டம்: கல்லூரி துணை முதல்வர்... உடனடியாக ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கிய எம்.பி
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு திறந்தவெளி கலையரங்கம் கட்டுவதற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எம்.பி.வெங்கடேசன் 5 லட்சம் நிதி ஒதுக்கி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக, நேற்று காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, "படிப்பதற்கென ஒரே பூங்கா மதுரையில் மட்டும் தான் உள்ளது. அது என் நீண்ட நாள் கனவு. அந்தக் கனவில் 25 சதவீதம் நிறைவேறி உள்ளது. 100 சதவீதம் நிச்சயம் நிறைவேற்றி விடுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது. மதுரை தொகுதியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 180 கோடி ரூபாய் கல்விக் கடன் பெற்றுத் தந்து உள்ளேன். மதுரை மாவட்டத்தில் மட்டும் பணிரண்டாவது முடித்துவிட்டு உயர்கல்வி தொடராமல் நிறுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 4800 ஆகும். அவர்களில் 90 சதவீத மாணவர்களுக்கு பொருளாதாரமே முதன்மைக் காணமாக இருக்கிறது. கல்விக் கடன் பெற்றுத்தருவதன் மூலம் அவர்களை உயர்கவியினைத் தொடர செய்ய முடியும். அனைத்து வித விமர்சனங்களையும் கடந்து காமராசர் அவருடைய கல்விப் பணிகளுக்காக மட்டுமே மக்கள் மனங்களில் நிறைந்து இருக்கிறார்” என்றார்.
தொடர்ந்து கல்லூரியின் துணை முதல்வர் உரையாற்றும் போது, பேராசிரியர் Prabahar Vedamanickam அவர்களின் ஃபேஸ்புக் பதிவு ஒன்றைச் சுட்டிக் காட்டி, பேராசிரியர் அவர்கள் முன்வைத்த குறையினைக் களையும் விதமாக எங்கள் கல்லூரி முன்னாள் மாணவர்கள் இணைந்து இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் ஒரு திறந்தவெளி கலையரங்கம் கட்டத் திட்டமிட்டுள்ளோம்' என்று குறிப்பிட்டார்.
இதனை உற்று நோக்கிய நாடாளுமன்ற உறுப்பினர், கலையரங்கம் கட்டுவதற்கு தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உடனடியாக ரூபாய் 5 லட்சம் ஒதுக்குவதாக அறிவித்தார். தொடர்ந்து பேராசிரியர் பிரபாகர் 'இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டை எதிர்கொள்ளுதல்' என்கிற பொருளில் மிகச் சிறந்ததொரு பேருரை வழங்கினார். 'படிப்பது என்பது முழு நேரத் தொழில். எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்கள் படிப்பதைப் பகுதிநேரமாகச் செய்ய முடியாது. இந்திய மாணவர் சமூகம் திறன் அற்றதாக உள்ளது. அதற்குக் காரணம் அவர்களிடம் கற்பனை வளம் இல்லை. உலகிலேயே இரண்டாவது மிப்பெரிய பொழுதுபோக்குச் சந்தை இந்தியத் திரைப்படத் துறைதான். ஆனால் இந்தியப் பாடத்திட்டங்களில் இசை, நாடகம், பாடல் போன்ற கலைகளுக்கு முக்கியத்துவம் இல்லை.
உலகையே வழிநடத்தக் கூடிய நாடகத் திகழ்வது அமெரிக்கா. அதற்குக் காரணம் அங்குள்ள மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் தான். உலகின் மிகச்சிறந்த முதல் ஏழு பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவில் தான் உள்ளன. இந்த நவீன உலகம் மிகச் சவால் நிறைந்தது. எதிர்காலத்தில் நிறைய உதவாக்கரைகளை உருவாக்கப் போகிறது. திறன் பெற்றவர்களுக்கு மட்டுமே எதிர்காலத்தில் வேலைகள் கிடைக்கும். எனவே படிக்கும் காலங்களில் மாணவர்கள் கலையார்வத்துடன் தங்களின் தனித் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்' அத்துடன்
மரபு, பாரம்பரியம், பரம்பரை போன்றவற்றைச் சுமந்து கொண்டு உயர்கல்விக்குள் நுழையமுடியாது. இவற்றை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு தனி மனிதனாகத் தங்களுடைய ஆளுமையை, தனித் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.