திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.. தனிச்சின்னத்தில் போட்டி - வைகோ பேட்டி
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கையெழுத்திட்டனர். திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தங்களுக்கு ஒதுக்கிய தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் எந்த தொகுதி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்ததால் நேற்று மதிமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புடன் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடர்வது என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. வரும் மக்களவை தேர்தலில் திமுக வழங்கும் இடத்தில் பம்பரம் சின்னத்திலோ அல்லது தனிச் சின்னத்திலோ போட்டியிட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. திமுக கூட்டணி தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.