மேலும் அறிய
Advertisement
சிவகங்கையில் கவிஞர் மீராவுக்கு இலக்கிய வட்டம் தொடக்கம்...!
கவிஞர் மீரா இலக்கிய வட்டமும், வ.உ.சி படிப்பகமும் சிவகங்கையில் தொடங்கப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் இருந்து சிவகங்கைச்சீமை இலக்கிய தோழமைகளுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
கவிஞர் மீரா இலக்கிய வட்டமும், வ.உ.சி படிப்பகமும் சிவகங்கையில் தொடங்கப்பட்டது. இங்கு ஆய்வாளர்கள் தங்கி படிக்கும் வகையில் நூல்களும், இடவசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஆசிரியர் இளங்கோ, புலவர் கா.காளிராசா, தீனதயாளன், கர்ணன், ராஜ்குமார், கதிர்நம்பி, மேதகு திரைப்பட கதாநாயகன் குட்டிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஒருங்கிணைப்பை புத்தகக்கடை முருகன் செய்திருந்தார்.
சிவகங்கை மண்ணில் சங்க இலக்கிய காலம் தொட்டே படைப்பாளர்கள் பரவலாக வாழ்ந்து வந்துள்ளனர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய கொள்கையை உதிர்த்த கணியன் பூங்குன்றனார் சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியை சேர்ந்தவர். பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியாரும் இவ்வூரைச் சேர்ந்தவர் ஆவார். போரில் தந்தையையும் கணவனை இழந்த மறப்பெண்ணொருத்தி தெருவில் விளையாடிய குழந்தையையும் மறுநாள் போருக்கு அனுப்பி வைத்ததாக மூதின் முல்லை துறையில் புறநானூற்று பாடல் பாடிய ஒக்கூர் மாசாத்தியாரும் இப்பகுதியை சேர்ந்தவராவார்.
கானப்பேரெயில்
கானப்பேரெயில் என்று வழங்கப்படும் காளையார் கோவில் பகுதியை ஆண்ட வேங்கைமார்பனை வெற்றிகொண்ட பாண்டியன் உக்கிரப் பெருவழுதி பற்றி ஐயூர் மூலங்கிழார் பாடிய பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி முன்னிலையில் மதுரையில் திருக்குறள் அரங்கேற்றப் பட்டதாக கூறப்படுவதும் உண்டு. மேலும் திருக்கானப்பேரைச் சேர்ந்த பேரெயில் முறுவலார் பாடல்கள் குறுந்தொகை மற்றும் புறநானூற்றில் காணப்படுகின்றன.
இரா. இராகவையங்கார், சிவகங்கை சீமை பகுதியைச் சார்ந்த கவிகுஞ்சர பாரதி, நாட்டரசன் கோட்டை முத்துக்குட்டி புலவர், பொன்னங்கால் அமிர்த கவிராயர், வேம்பத்தூர் நாராயணகவி, பிச்சுவையர், செவ்வை சூடுவார் போன்றோர் 17,18 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியில் வாழ்ந்த புலவர்களாவர். 19,20 ஆம் நூற்றாண்டுகளில் கவியோகி சுத்தானந்த பாரதியும் ஆலங்குடி சோமு, கவிஞன் ஒரு காலக்கணிதம் என பாடி திரை இசை பாடல்களிலும் தனி முத்திரை பதித்த சாகித்திய அகாதமி விருது பெற்ற சிறுகூடல்பட்டி கவியரசர் கண்ணதாசனும் இப் பகுதியைச் சார்ந்தவராவார். பாரதிதாசன் பரம்பரை கவிஞர் முடியரசனார், திறன் ஆய்வுகளில் சிறந்து விளங்கிய வ.சுப.மாணிக்கனார், தமிழண்ணல் மொழிபெயர்ப்புகளில் சிறந்து விளங்கிய பேராசிரியர் தர்மராஜன் தற்போது மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கா.செல்லப்பன் ஆகியோரும் படைப்புகளால் சிறந்த கவிஞர் மீனவன், பழனிஇராகுலதாசன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
கம்பனைக் கொண்டாடும் காரைக்குடி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர் நாகப்பட்டினத்தில் உள்ள தேரழுந்தூரில் பிறந்தாலும் தன் இறுதிக்காலத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள நாட்டரசன் கோட்டை கருதுப்பட்டியில் வாழ்ந்து மறைந்தார். அவர் நினைவிடம் இன்றும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கம்பராமாயணத்தை படித்து அதன் இலக்கியச் சுவை உணர்ந்து அதை அனைவரும் படித்து இன்புற உலகம் முழுவதும் கம்பன் கழகங்கள் இருந்தாலும் காரைக்குடி கம்பன் கழகம் தனித்துவமானது. கம்பனுக்கும் கவியரசர் கண்ணதாசனுக்கும் மணிமண்டபம் கொண்டுள்ளது காரைக்குடி.
கவிஞர் அ. முத்துலிங்கம். கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது,கபிலர் விருது என பல விருதுகளைப் பெற்ற வரும் திரைப்பாடல்களில் நயமிக்க பாடல்களை படைத்து வருபவருமான கவிஞர் முத்துலிங்கம் ஐயா அவர்கள் சிவகங்கை மாவட்டம் கடம்பங்குடி எனும் ஊரைச் சேர்ந்தவர் ஆவார்.
இப்படி பல அடையாளங்களைக் கொண்ட சிவகங்கையின் மிகப்பெரும் அடையாளமாக கவிஞர்களின் முகவரியாக வாழ்ந்தவர் கவிஞர் மீரா அவர்கள். இலக்குமி அம்மாள், மீனாட்சி சுந்தரம் தம்பதியின் மகனாகப் பிறந்தவர் மீ.ராஜேந்திரன். பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தாலும் சிவகங்கைதான் இவர்களுக்கு சீமையாக இருந்தது. சிவகங்கையில்தான் பிறந்து வளர்ந்து, பள்ளிப் படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை முடித்தார். அன்னம் விடும் தூது’ என்கிற இலக்கிய இதழ் நடத்தினார். மதுரை காரமராஜர் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டக்குழு தலைவரானபோது தந்தைப் பெரியார், பகத்சிங், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் படைப்புகளை பாடத்திட்டத்தில் இடம் பெறச்செய்தார்.
சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியராக பணி செய்தாலும் தமிழ்நாடு முழுதுமுள்ள படைப்பாளர்களை வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றியவர். இளங் கவிஞர்களை இளம் படைப்பாளிகளையும் அன்னம்,அகரம், செல்மா பதிப்பகங்களின் வழி முன்னிறுத்திய முதன்மையாளர். இவரது கனவுகள்+ கற்பனைகள்= காகிதங்கள். கவிதை உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. காதலை பாடியதில் தனித்துவம் மிக்கது கனவுகள் என்றால் சமூக அவலங்களை அங்கதத்தால் பாடியது ஊசிகள் எனலாம். சாகாத வானம் நாம் என்று தன் வாழ்வை பாடிய கவிஞர் மீரா அவர்கள் சிவகங்கையின் தனித்த அடையாளம் ஆவார். சிவகங்கையில் தனி ஒருவராக மகாகவி பாரதிக்கு பத்து நாட்கள் நூற்றாண்டு விழா எடுத்தவர். இறைமறுப்பாளர் சொல்லிலும் செயலிலும் ஒன்றி வாழ்ந்தவர். எத்தனை முறை விழுந்தாலும் மீசையில் ஒட்டவேண்டுமே இந்த மண் எம்மண் இந்த செம்மண் என்ற சிவகங்கை மண்ணின் மைந்தர் கவிஞர் மீரா அவர்களின் பெயரால் கவிஞர் மீரா இலக்கியவட்டம் உதயமானது தமிழில் இலக்கிய ஆர்வம் உடைய அனைவருக்கும் பெருமகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தமிழ் உணர்வு வளர்ந்துவருவதாக கொல்லங்குடி புலவர் கா.காளிராசா தெரிவித்தார். இப்படி பட்ட மீராவுக்கும் இலக்கிய வட்டம் ; வ.உ.சிக்கு படிப்பகம் துவங்கியது சிவகங்கை மாவட்டத்தில் வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion