Last Supermoon: நாளை இந்தாண்டின் கடைசி சூப்பர் மூன்… தமிழ்நாட்டில் எப்போது காணலாம் தெரியுமா?
வட அமெரிக்காவில் காணப்படும் மிகப்பெரிய மீனின் பெயரான ஸ்டர்ஜன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன் (அரிய வானியல் நிகழ்வு) நாளை (ஆகஸ்ட் 12ஆம் தேதி) தோன்றுகிறது. இந்த நாளில், நிலா வழக்கமான நிலவின் தோற்றத்தை விட பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும்.
இதுகுறித்து கலிலியோ அறிவியல் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியருமான கண்ணபிரான் கூறியதாவது:
''சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நிலாவைப் பார்க்கப் பிடிக்கும். முழு நிலவு என்றால் கூடுதல் பிரகாசத்துடன் அழகாக இருக்கும். அந்த வகையில் சூப்பர் மூன் தோன்றவிருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 7.05 மணிக்கு சூப்பர் மூன் தோன்ற உள்ளது. இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன் இது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுக்க அனைத்துப் பகுதிகளிலும் சூப்பன் மூன் தெரியும்.
வெறும் கண்களாலேயே இதைக் காணலாம்
சூப்பர் மூனை வெறும் கண்களாலேயேக் காணலாம். இந்த சூப்பர் மூனுக்கு பெயரும் வைக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்காவில் காணப்படும் மிகப்பெரிய மீனின் பெயரான ஸ்டர்ஜன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சூப்பர் மூன் என்றால் என்ன?
நிலவு அதன் சுற்றுப் பாதையில், பூமிக்கு மிக அருகில் இருக்கும் அதே நேரத்தில் முழு நிலவாக இருக்கும்போது சூப்பர் மூன் அதாவது பெரு நிலவு ஏற்படுகிறது. நிலவு பூமியை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. எனவே, ஒரு புள்ளியில் நிலவு பூமிக்கு மிக அருகிலும், இன்னொரு புள்ளியில் தொலைவிலும் இருக்கும்.
எனவே, முழு நிலவானது பூமிக்கு மிக அருகில் தோன்றும்போது சற்று பிரகாசமாகவும் வழக்கமான முழு நிலவை விட பெரிதாகவும் தோற்றமளிக்கும். இதைத்தான் சூப்பர் மூன் அதாவது பெரு நிலவு என்று அழைக்கிறோம். சூப்பர் மூன் நிகழும்போது முழு நிலவு வழக்கத்தை விட பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும்
ஆண்டுக்கு எத்தனை முறை சூப்பர் மூன் தோன்றும்?
இந்த ஆண்டு நான்கு சூப்பர் மூன் நிகழ்கிறது. ஆகஸ்ட் 12ஆம் தேதி வரும் சூப்பர் மூன் இந்தாண்டின் கடைசி சூப்பர் மூன் ஆகும். அடுத்த சூப்பர் மூன் 2023, ஆகஸ்ட் 1ஆம் தேதி தோன்றும். இந்தாண்டைப் போலே அடுத்த ஆண்டும் நான்கு சூப்பர் மூன் நிகழும். 2024 ஆண்டும் நான்கு சூப்பர் மூன், 2025ஆம் ஆண்டு மூன்று சூப்பர் மூன் நிகழும் .
ஆகஸ்ட் 12ஆம் தேதி தோன்றும் சூப்பர் மூன் அமெரிக்காவில் காணப்படும் மிகப்பெரிய மீனின் பெயரால், ஸ்டர்ஜன் மூன் (Sturgeon Moon) என்று அழைக்கப்படுகிறது. இந்த அரிய வானியல் நிகழ்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.
கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் வான் நோக்கும் நிகழ்ச்சி தேஜஸ் மஹாலில் நடைபெற உள்ளது'' என்று ஆசிரியர் கண்ணபிரான் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்