(Source: ECI/ABP News/ABP Majha)
Kulithlai: பட்டியலின இளைஞரை உள்ளே விட மறுப்பு.. கோயிலை பூட்டி சீல் வைத்த வருவாய் துறையினர்..!
குளித்தலை வீரணம்பட்டி காளியம்மன் கோவிலில் இளைஞரை உள்ளே விட மறுத்த விவகாரத்தில் வருவாய் துறையினர் கோவிலை பூட்டி சீல் வைத்தனர். மூன்று மணி நேரம் நீடித்த பேச்சு வார்த்தை தடியடியில் முடிந்ததால் பரபரப்பு.
குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோவிலில் பட்டியலின இளைஞரை உள்ளே விட மறுத்த விவகாரத்தில் வருவாய் துறையினர் கோவிலை பூட்டி சீல் வைத்தனர்.
கரூர் மாவட்டம், கடவூர் அருகே வீரணம்பட்டியில் வீரணம்பட்டி, கரிச்சபட்டி, கொள்ளுதண்ணிப்பட்டி, சரக்கம்பட்டி, மாலப்பட்டி, கீழ ஆணை கவுண்டம்பட்டி, வீரகவுண்டம்பட்டி ஆகிய எட்டு ஊர்களுக்கு பொதுவான ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தற்போது வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் அதே ஊரைச் சேர்ந்த பட்டியலின இளைஞரை கோவிலில் நுழைய குறிப்பிட்ட சமூகத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவி தலைமையிலான வருவாய்த்துறையினர், குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான காவல்துறையினர் ஆகியோர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் குறிப்பிட்ட சமூகத்தினர் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து வருவாய்த் துறையினர் கோவிலின் கதவினை இழுத்துப்பூட்டி சீல் வைத்தனர். இதனால் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆர்டிஓ வின் காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்ட சம்பவத்தால் வீரணம் பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக சுமார் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று மணி நேரம் நீடித்த பேச்சு வார்த்தை தடியடியில் முடிந்ததால் பரபரப்பு.
வீரணம்பட்டி பகுதியில் காளியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பு சமூகத்தினர் பிரச்சனை காரணமாக கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில், கோட்டாட்சியர் புஷ்பாதேவி, தாசில்தார் முனிராஜ் உள்ளிட்ட அதிகாரிகளை மூன்று மணி நேரமாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள். போராட்டத்திற்கு பிறகு காவல்துறை லேசான தடியடி நடத்தி விடுவித்து, அதிகாரிகள் வந்த வாகனத்தை அனுப்பி வைத்தனர்.
அப்போது வாகனம் அதிவேகமாக சென்ற போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த 17 வயது (பவதாரணி) சிறுமி மீது கோட்டாட்சியர் வாகனம் மோதியதாக கூறப்படும் நிலையில், தூக்கி வீசியதில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.