KT Rajendra Balaji: ‛எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவிடக்கூடாது’ -ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் தமிழக அரசு கேவியட் மனு!
ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 கோடி பண மோசடி செய்தாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து எங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அவர் மீது புகார் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதை விசாரித்து வந்தனர்.
விசாரணையின் முடிவில் தற்போது அவர் மீது இரு புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயநல்லதம்பி என்பவர், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜியிடம், பலருக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக தன்னிடம் அவர் கூறியதாகவும், அதன் அடிப்படையில் பலரிடமிருந்து பணம் பெற்று ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்ததாகவும், 'நான் பலரிடம் வாங்கி கொடுத்த 3 கோடி ரூபாயை ராஜேந்திர பாலாஜி திரும்பி தரவில்லை' என, விஜயநல்லதம்பி, விருதுநகர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரை மறுத்த ராஜேந்திரபாலாஜி, விஜய நல்லதம்பி குறித்து அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அதில், தன் மீது வீண் புகார் தெரிவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியிருந்தார். அது மட்டுமின்றி, தான் நியாயமானவர் என்பது தன்னுடன் இருப்பவர்களுக்கும், தன்னை அறிந்தவர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் தெரியும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதோடு உச்சநீதிமன்றத்தில், புதிய முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். இதனிடையே ராஜேந்திர பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டிஸும் விடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், எங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.