மேலும் அறிய
Advertisement
மறக்க முடியுமா லட்சுமி தியேட்டரை? 115 பேரின் உயிரை பலி வாங்கிய நீங்காத வடு!
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் லட்சுமி தியேட்டர். 1979 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தினத்தில் மாட்னி ஷோ பாவமன்னிப்பு படம் அந்த ஓலை கொட்டகை திரையரங்கில் ஓடிக்கொண்டு இருந்தது.
தூத்துக்குடி நகரை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த லட்சுமி தியேட்டரில் டிக்கெட் விலை 40 பைசா, ஏ கிளாஸ் டிக்கெட் பெஞ்ச் இருக்கை. எல்லோரும் மணலில் அமர்ந்து பாவமன்னிப்பை பார்த்து கொண்டு இருந்தனர். நீளமான இப்படம் சுமார் 3 மணி நேரம் கொண்டது. படத்தின் இடைவேளை முடிந்ததும் ' வந்த நாள் முதல் இந்த நாள் வரை"... என பாடல் வரும், பாட்டு முடியும் தருவாயில் ஆத்துல குதிச்சி தற்கொலை செய்ய வரும் சாவித்திரியை காப்பாத்தி அநாதை குழந்தையை வளர்க்க சொல்வார் சிவாஜி.
குழந்தையை சாவித்திரியில் கையில் வாங்க, திரைல பார்வைல படுறமாதிரி சின்னதா தீ எரியுற மாதிரி தெரிஞ்சிதாகவும் அது படத்துல வர்றதுன்னு பார்த்துட்டு இருக்க தீ தீன்னு கத்த என்ன ஏதுன்னு தெரிவதுக்குள் தீ மளமளவென பிடிச்சுது. மாட்னி ஷோ என்பதால் கொட்டைகையில் அனைத்து பகுதிகளும் தார்ப்பாய் கொண்டு மூடியதோடு மட்டுமல்லாமல், பகல் வெளிச்சம் வராமல் இருக்க தார்ப்பாய் தரை பகுதியில் மணல் மூடை கொண்டு மூடப்பட்டு இருந்ததால், கொட்டகைல சினிமா பார்த்து கொண்டிருந்த 300 பேரும் சிக்கி கொண்டனர். தப்பிக்க கொட்டைகையின் கம்பை பிடிச்சி சனங்கள் ஆட்ட மொத்த கூரையும் உள்ள இருந்தவுக மேல விழுந்து அமுக்க கண் கொண்டு பார்க்க இயலாத நிலை. அதிகபட்சம் அரை மணி நேரம் தான், அப்பவே நூற்றுக்கணக்கான சனம் செத்து போச்சி என்கிறார் சம்பவத்தை நேரில் கண்டவர்.
ஆண்கள் பலர் தார்ப்பாயை கிழித்து தப்பிக்க குழந்தைகளோடும் குடும்பத்தோடும் வந்திருந்த பெண்கள் உடைகள் தீ பிடித்ததால் வெளியே ஓடி வந்தாலும் மீண்டும் தீக்குள் சென்று கருகி போனார்கள். இத்தீவிபத்தில் 115 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் , தூத்துக்குடி, நெல்லை, மதுரை என காயம்பட்டவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தூத்துக்குடி மருத்துவமனைகளில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் வாழை இலையில் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
42 வருடங்களுக்கு முன் ஜூலை 31 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் ஆறுதல் கூறினார். தீவிபத்தில் கர்ப்பிணி பெண்ணை தனது உயிரை பொருட்படுத்தாமல் உள்ளே சென்று காயமடைந்த பெண்ணை தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்த அவருக்கு பரிசினை அளித்தார் எம்.ஜி.ஆர்.
இந்தியாவையே உலுக்கிய இவ்விபத்தில் உயிரிழந்தோருக்கு அப்பொதைய பிரதமர் சரண்சிங் தனது இரங்கலை தெரிவித்து உயிரிழந்தோருக்கு நிவாரணம் அளித்தார், தமிழக அரசும் நிவாரணம் அளித்தது, சிவாஜி கணேசன் நிவாரணம் வழங்கினார்.
இவ்விபத்தில் உயிரிழந்தோருக்கும் காயமடைந்தோருக்கும் நிதி உதவி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தான் ஓலை குடிசையில் மாட்னி ஷோவுக்கு தடை விதித்தது தமிழக அரசு.
தூத்துக்குடி லட்சுமி தியேட்டர் தீவிபத்து குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட முன்னாள் துணைமேயர் சேவியர், அப்போ எனக்கு 24 வயசு, எங்க வீடு லூர்தம்மால்புரம் தான், ஞாயித்துகிழமை மத்தியானம் தீ தீ தியேட்டரில் தீன்னு சொல்ல வீட்ல இருந்த விழுந்தடித்து ஓடினோம், எல்லாம் கரிக்கடையாகவும் குத்துயிரும் குலை உயிருமாக துடித்தனர். அவர்களை காப்பாற்ற தூக்க சதையும் ரத்தமுமாக இருந்தனர்..
தான் கட்டியிருந்த சாரத்தை கழத்தி கொடுத்தேன், என்ன செய்ய ஒட்டுத்துணி இல்லாததால் வெளியே வந்த பெண்கள் மீண்டும் தீக்குள் கருகினர்.
இந்த கோர விபத்தின் சாட்சியாக இருக்கிறார் சேசுமரியாள் கூறும் போது, படம்பார்த்துட்டு இருந்தோம், திடீரென தீ பிடித்ததால் என்னயாதுன்னு எப்படி தப்பிக்கன்னு யோசிப்பதுக்குள் மேல இருந்த கட்டை ஒன்னு உடைஞ்சி என் கால்களில் விழுந்தது, நானும் என் வீட்டுக்காரர் சேசு நஸ்ரைனும் படத்துக்கு போயிருந்தோம், அவருக்கும் தீக்காயம் அதிலும் எங்களை காப்பாத்தினாக, அப்போ எனக்கு வயித்துல மூனுமாத குழந்தை என சொல்லும் போதே அழுது விடுகிறார்
இந்த கோர விபத்தின் சாட்சியாக ஓரிருவர் இன்னும் வசித்து வருகின்றனர், நாப்பது பைசா டிக்கெட் 42 வருசமாச்சி, ரணங்கள் குறையவில்லை என்றார்.
இத்தீவிபத்து குறித்து சத்யா லட்சுமணனிடம் கேட்டபோது, தலைவர் வந்தார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எல்லோரிடமும் நலம் விசாரித்து ஆறுதல் கூறியதாக தனது நினைவை அசைபோட்ட அவர், 42 வருசமாச்சி தூத்துக்குடி நகர் பகுதிக்குள் மீண்டும் பாவமன்னிப்பு திரைப்படம் வரவே இல்லை என்கிறார். அன்று ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த தூத்துக்குடி நகரத்தையே பிணக்காடாக மாற்றிய லட்சுமி டாக்கீஸ் தீவிபத்து பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அது பற்றி எந்தப் பேச்சும் இல்லை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion