Kushboo on Periyar: பெரியார் சிலைக்கு காவிப்பொடி பூசுபவர்கள் கோழைகள்...! - கோவை சம்பவத்துக்கு குஷ்பு கண்டனம்
கோவை வெள்ளலூரில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி பொடி தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் கட்சியினர் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே தந்தை பெரியார் படிப்பகம் உள்ளது. இங்கு திராவிடர் கழகத்திற்கு சொந்தமான பெரியார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி பொடி தூவி செருப்பு மாலை அணிவித்து உள்ளனர். பெரியார் சிலை மீது காவி பொடி தூவியுள்ளதை கண்ட அப்பகுதி மக்கள், மற்றும் திராவிடர் கழகத் தொண்டர்கள் அப்பகுதியில் ஒன்று கூடி ஆர்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து பெரியார் சிலை மீது செருப்பு மாலை மற்றும் காவி பொடி தூவிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளியை கண்டு பிடித்து விரைவாக கைது செய்ய வேண்டும் என அந்த பகுதியில் ஆர்பாட்டங்கள் நடத்தியவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மேலும் கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகம் முன்பு உள்ள பெரியார் சிலை அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, அப்பகுதியில் ஏதேனும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் இரவு நேரத்தில் அப்பகுதியில் யாரேனும் இருந்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த வேளையில், இது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Absolutely appalled at what happened in Coimbatore yesterday. #ThanthaiPeriyar is revered by many and we have to respect that. Whoever is responsible for this shameful act, should be punished. Painting it orange is a clear indication of an act of mischief. Only cowards do that.
— KhushbuSundar (@khushsundar) January 10, 2022
இந்நிலையில் இது குறித்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குஷ்பு, “நேற்று கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். தந்தை பெரியார் பலராலும் போற்றப்படுபவர். அவரை நாம் மதிக்க வேண்டும். இந்த வெட்கக் கேடான செயலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அவர் மீது காவி வண்ணம் பூசுபவர்கள் கோழைகள்” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்