கரூரில் கல் குவாரிகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு - கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு
மாவட்ட ஆட்சியர், தொடர்ந்து இது போன்ற கருத்து கேட்புக் கூட்டங்களில் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் காரில் ஏறிச் சென்றார்.
கரூர் கல் குவாரிகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு - கருத்து கேட்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன்.
கல்குவாரிகளில் முறையான ஆய்வுகள் நடைபெறவில்லை என்ற பொது மக்களின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தியை அடுத்துள்ளது குப்பம் கிராமத்தில் சண்முகம் மற்றும் தேவராஜ் என்பவர்களுக்கு சொந்தமான நிலங்களில் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்புக் கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையிலும், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ஜெயலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த குவாரிகள் அருகில் வசிக்கும் விவசாய பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என குவாரியின் உரிமையாளர்களின் ஆதரவாளர்களில் ஒரு சிலர் கூறினாலும், அனுமதி அளிக்கக் கூடாது என அவர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அடுக்கடுக்கான ஆதாரமான ஆவணங்களுடன் பேசிய சமூக ஆர்வலர் முகிலன், 40 ஆவணங்கள் அரசுக்கு சமர்பிக்க வேண்டும் என விதி இருக்கும் பட்சத்தில் 10, 12 ஆவணங்கள் மட்டுமே சமர்பிப்பதாகவும், அதில் பலவற்றை மறைத்து ஆவணங்கள் சமர்பிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், அண்டை மாவட்டங்களில் இது போன்று கருத்து கேட்புக் கூட்டங்களில் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் நிலையில், திமுக ஆட்சியில் நடைபெறும் கல்குவாரி கருத்து கேட்பு கூட்டங்களில் ஆட்சியர் இதுவரை ஒரே ஒரு கூட்டத்தில் மட்டுமே பங்கேற்றுள்ளதாகவும், பல கூட்டங்களில் முந்தைய ஆட்சியர் பிரபு சங்கரும், தற்போதைய ஆட்சியர் தங்கவேல் பங்கேற்பது இல்லை என குற்றச்சாட்டு எழுப்பினார். தேவராஜ் என்பவருக்கு சொந்தமான கல்குவாரிக்கு அருகில் வசிப்பவர்களை மிரட்டுவது, வாகனங்களை ஏற்றி கொலை செய்ய முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகளில் குவாரி உரிமையாளர்கள் ஈடுபடுவதாக கூறி முதியவர் ஒருவர் குற்றம் சாட்டினார்.
அப்போது செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் கேள்வி கேட்ட போது, இது தொடர்பான வீடியோக்களையும், கூட்ட விளக்கங்களையும் மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டுக் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அவர்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று கூறினார். மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து இது போன்ற கருத்து கேட்புக் கூட்டங்களில் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் காரில் ஏறிச் சென்றார். இதே போன்று மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ஜெயலட்சுமியிடம் கல்குவாரிகளில் முறையாக ஆய்வுகள் நடைபெறவில்லை என்று பொதுமக்கள் எழுப்புகின்ற தொடர்ச்சியான குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரே வரியில் பதிலளித்து விட்டு வாகனத்தில் ஏறிச் சென்றார்.