(Source: ECI/ABP News/ABP Majha)
குளித்தலை அருகே தார் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படுகிறது.
கரூர் குளித்தலை அருகே வேலங்காட்டுப்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி வேலங்காட்டுப்பட்டியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழைய தார் சாலை ஆனது பெயர்த்து எடுக்கப்பட்டது. ஆனால் சாலையில் முன்பு இருபுறமும் மழைநீர் வடிகாலுக்கான பாதை இருந்ததாகவும் தற்போது அதை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழை நீர் வடிய வழி இல்லாமல் தேங்கி நிற்பதாகவும், எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
ஆனால் ஏற்கனவே சாலை இருந்த அளவிற்கு தான் சாலை போடப்படும் எனவும் அதிகாரிகள் கூறியதால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தார்ச்சாலை அமைக்க கூடாது எனவும் கூறியுள்ளனர். இதனால் கடந்த ஒரு மாதமாக பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் வேலங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு துவக்க பள்ளியில் சுமார் 250க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
சாலை பெயர்த்து எடுக்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்படுவதாகும் மேலும் பள்ளி குழந்தைகள் சாலையில் தடுக்கி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு வருவதாகவும், அப்பகுதி பொதுமக்கள், நோயாளிகள் அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் எனவே அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைத்து இருபுறமும் மழை நீர் வடிகால் அமைக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் ஆக்கிரமிப்பால் சில இடங்களில் சாலை குறுகலாக இருப்பதினால் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வரை இங்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.