கரூரில் நீதிமன்றம் மூலம் கோயில் இடத்தை மீட்ட இந்து அறநிலை துறை - தீர்வை நோக்கி காத்திருக்கும் மக்கள்
கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 500 ஏக்கர் நிலங்கள் காதப்பாறை, ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி பகுதியில் தனியார் வசம் உள்ளது.
கரூரில் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்டு இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என திருத்தொண்டர் திரு சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் 2019-ல் கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவில் நிலங்களில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் மக்கள் எதிர்ப்பு காரணமாக ஐந்து ஆண்டுகள் கடந்தும் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்த முடியவில்லை. இதைத் தொடர்ந்து திருத்தொண்டர் திருசபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
கோவில் நிலங்களை மீட்டு ஆக்கிரமிப்பை அகற்றி அதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மதுரை உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து காவல் துறை துணையோடு கோயில் நிலங்களை மீட்கும் பணியில் இந்து அறநிலையத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் போராட்டம், சாலை மறியல் என பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரத்தில் முதல் கட்டமாக வெண்ணைமலை பகுதியில் கோவில் பெயரில் ஆவணங்கள் உள்ள 10 வணிக வளாக கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து காலியிடங்களில் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்ட நிலம் அந்நியர்கள் உள்ளே நுழைய கூடாது என எச்சரிக்கை பதாகை வைத்தனர்.
இந்த நிலையில் மீண்டும் நேற்று காதப்பாறை ஊராட்சி மற்றும் ஆத்தூர் பூலாம்பாளையம், சின்ன வடுகப்பட்டி பகுதியில் கோவில் நிலங்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். சின்ன வடுகபட்டியில் கோவில் நிலத்தில் தார் சாலை அமைக்கப்பட்டு தனியர் வசம் பயன்பாட்டில் இருந்த சாலையை ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையின் இரு புறங்களிலும் பள்ளம் தோண்டி சாலையை போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் அப்பகுதியில் இது கோயில் நிலம் யாரும் உள்ளே செல்ல கூடாது என அறிவிப்பு பலகை வைத்தனர். நீதிமன்றத்தில் இருந்து அனுப்பப்பட்ட அரசு அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.