கரூரில் அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி தமிழக அரசை கண்டித்து பேரணி
அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி தமிழக அரசை கண்டித்து சுமார் 50 பேர் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கண்டன கோஷங்களை முழங்கியபடி வந்தனர்
கரூரில் அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி தமிழக அரசை கண்டித்து பேரணி நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பல்வேறு கட்சியினர் வருகை தருவதை ஒட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணல் அம்பேத்கர் சிலை அமைப்பு குழு சார்பில் கரூரில் அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி தமிழக அரசை கண்டித்து சுமார் 50 பேர் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கண்டன கோஷங்களை முழங்கியபடி வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவதால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தாங்கள் கொண்டு வந்த மனுவை போட்டுவிட்டு சென்றனர். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கரூரில் அம்பேத்கர் சிலை அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு, சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அம்பேத்கருக்கு சிலையமைக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மறுப்பதாகவும் சிலை அமைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தெரிவித்தார்.