மணவாடியில் புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு; நிகழ்ச்சியில் சென்னை மக்களுக்கு நிவாரணம் வழங்கிய மாணவர்
உண்டியலில் சுமார் 600 ரூபாய் வரை சேமித்து வைத்திருந்ததாகவும், அதனை சென்னைக்கு நிவாரணத்திற்காக வழங்கியதாக பெற்றோர் தெரிவித்தனர் .
கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணவாடி ஊராட்சி அலுவலகம் சிறிய அளவில் இருந்தால் புதிய அலுவலகம் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 23.57 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் கிருஷ்ணாயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.
ஊராட்சி தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த அலுவலகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம், அலுவலகத்திற்கு மாற்று திறனாளிகள் வந்து செல்ல பிரத்யேக பாதை, அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய 18 கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரண நிதி
நிகழ்ச்சியின்போது, சென்னை வெள்ள நிவாரண நிதியாக 5ம் வகுப்பு மாணவன், தன் உண்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதையும், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் நிவாரணம் வழங்குவதை கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்த மணவாடி கிராமத்தை சார்ந்த ஹித்தேஷ் (வயது 10) என்ற 5 ம் வகுப்பு மாணவன் பார்த்துள்ளார். தான் வேதனையடைந்த நிலையில், சிறுவனும் உதவி செய்ய வேண்டும் என பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மணவாடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு வந்த ஆட்சியர் தங்கவேலிடம் தான் கடந்த 6 மாத காலமாக சேர்த்து வைத்திருந்த சேமிப்பு காசுகளை உண்டியலுடன் வழங்கினான். மணவாடி ஜோதிமணி, சரவணன் தம்பதியினரின் மகன் ஹிதேஷிற்கு ஷாலினி என்கின்ற அக்கா இருக்கிறார். உண்டியலில் சுமார் 600 ரூபாய் வரை சேமித்து வைத்திருந்ததாகவும், அதனை சென்னைக்கு நிவாரணத்திற்காக வழங்கியதாக பெற்றோர் தெரிவித்தனர் .