வறண்ட பாலைவனம் போல் காட்சியளித்த அமராவதி ஆறு - விவசாயிகள் கவலை
கரூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் அமராவதி ஆறு முற்றிலும் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.
அமராவதி ஆறு வறண்டதால் விவசாயிகள் கவலை.
கரூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் அமராவதி ஆறு முற்றிலும் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆறு மற்றும் காவிரி ஆறு ஆகிய இரண்டு ஆறுகள் பாய்கின்றன. இதில், காவிரி ஆறு மாவட்டத்தின் புறநகர் வழியாகவும், அமராவதி ஆறு கரூர் மாநகரின் வழியாகவும் செல்கின்றன. கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மி.மீ. ஆகும். இந்த மழையளவை தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய காலங்களில் பெய்யும் மழை தான் எட்ட உதவி வருகின்றனர். தென்மேற்கு பருவமழை காலம் துவங்கி இரண்டு மாதங்கள் முடிவடைந்த நிலையில், தற்போது வரை போதிய அளவு மழையில்லாத நிலை உள்ளது.
இதன் காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக அமராவதி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் மழைக்கு பதிலாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெயிலின் அளவு அதிகரித்து பொதுமக்கள், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அமராவதி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளின் மழை பெய்யாத காரணத்தால் ஆற்றில் தண்ணீர் வரத்தின்றி முற்றிலும் வறண்டு பாலைவனம் போல் காணப்படுகிறது. வரும் நாட்களிலாவது மழை பெய்து, அமராவதி ஆற்றின் தண்ணீர் வரத்து ஏற்பட வேண்டும் என, பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்து உள்ளனர்.
மாயனூர் கதவனுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
மாயனூர் கதவனணக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. கரூர் அருகே ,மாயனூர் கதவனணக்கு வினாடிக்கு, 8,972 கன அடி தண்ணீர் வந்தது. நிலவரப்படி தண்ணீர் வரத்து, 8,570 கன அடியாக குறைந்தது. டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 8,570 அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தென்கரை வாய்க்கால், கீழ்கட்டளை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால்களில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு, நிலப்பரப்படி வினாடிக்கு, 61 கன அடியாக தண்ணீர் வந்தது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 63.19 அடியாக இருந்தது.