கரூரில் பெய்த கனமழையால் அமராவதியில் பெருக்கெடுத்து ஓடிய நீர்- மகிழ்ச்சியில் விவசாயிகள்
கரூர் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் செல்லும்போது தடுப்பணை ரம்மியமாக காட்சி அளிக்கும்.
கரூரில் பெய்த கனமழையின் காரணமாக வாய்க்கால்கள் மூலம் மழைநீரானது அமராவதி ஆற்றில் பெருக்கெடுத்து, ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால் பாசன விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அமராவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதில்லை. வடகிழக்கு பருவமழை காலங்களில் அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் பட்சத்தில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும். அப்போது கரூர் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் செல்லும்போது தடுப்பணை ரம்மியமாக காட்சி அளிக்கும்.
கோடை காலம் துவங்கிய நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து இன்றி ஆண்டாங்கோவில் தடுப்பணை வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள தடுப்பனையில் மழைநீர் வடிந்து செல்கிறது.
பருவமழை காலங்களில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் நீர் திறக்கப்பட்டு, அந்த நீரானது திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யும். தற்போது கோடை மழை காலத்தில் கனமழை பெய்து கிளை வாய்க்கால்கள், ராஜ வாய்க்கால்கள் மூலமாக அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து, தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால் அமராவதி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.