'உதயநிதி ஸ்டாலின் ஏன் அமைச்சராக வேண்டும்?’ - கார்த்திகேய சிவசேனாதிபதி முதலமைச்சருக்கு எழுதிய மடல்..!
உதயநிதி ஸ்டாலின் ஏன் அமைச்சராக வேண்டும்? என காரணங்களை பட்டியலிட்டு திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு மடல் எழுதியுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் ஏன் அமைச்சராக வேண்டும்? என காரணங்களை பட்டியலிட்டு திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு மடல் எழுதியுள்ளார்.
அதில் “கழக தலைவராக எங்கள் அனைவர்க்கும் ஒரு குடும்ப தலைவராக வழி நடத்தி செல்லும் தங்களுக்குத் தெரியாதது என்று ஏதும் இல்லை. ஒரு சட்டமன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர். ஆளும் கட்சியின் உறுப்பினர் அமைச்சர் ஆக்கப்படுவதற்கு எல்லா தகுதியும் சட்டப்படி உண்டு. இந்திய அரசியல் அமைப்பும் இதையே ஒரு குடிமகனின் உரிமையாக, தகுதியாகக் குறிப்பிடுகின்றது. அந்த தகுதியை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள உதயநிதி ஸ்டாலின் முழுமையாகப் பெற்று உள்ளார்.
இரண்டாவதாக, தொடர்ந்து சமூக நீதி, பெரியாரின், திராவிட கொள்கையைக் கொண்ட மாபெரும் தலைவரான, இந்திய நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், ஆகியோரை தேர்ந்து எடுத்த, தலைவர் கலைஞர் அவர்களின் மடியிலே, அவரின் கொள்கைகளை இறுகப் பற்றி வளர்ந்த பேரன் என்பதைக் கடந்த 10 ஆண்டு கால அவரின் அரசியல் பாதை, தமிழக மக்கள் மீது தாத்தாவைப் போல் அவர் கொண்ட அன்பையும் தொடர்ந்து தனது களப் பணியில் அயராது நிரூபித்து வருகின்றார். எப்படி மருத்துவம் பயின்ற தாய் தந்தையின் பிள்ளைக்கு மருத்துவம் எளிதாகப் புலப்படுமோ, ஒரு விவசாயியின் மகன்,மகளுக்கு விவசாயம் குறித்து சுலபமாக கற்றுக் கொள்வார்களோ அதுபோல் முழுக்க முழுக்க அரசியல் சூழலில் பிறந்து வளர்ந்து தினசரி வாழ்வியல் அங்கமாகப் பெற்றவர் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். அப்படி இருக்கும் சூழலில், அரசியல் புரிதலும், அரசியல் சார் அறிவும், சமூக நீதி பாதையும் அவருக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து இருக்கிறது எனத் தொண்டர்களுக்கு, கழக உடன்பிறப்புகளுக்குக் கடந்த சில வருட காலமாக அவரின் அரசியல் பணி தெளிவாக உணர்த்தி உள்ளது.
மூன்றாவதாகக் கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் குறிப்பாகத் தனது தொகுதி என்று தனது வட்டத்தைச் சுருக்கிக் கொள்ளாமல், நமது கட்சி மட்டும் இல்லாமல் தோழமை கட்சி வேட்பாளர்களுக்காகவும் அயராது அவர் உழைத்ததைக் கழக உடன்பிறப்புகளை நெகிழச் செய்தது என்றால் மிகை ஆகாது. எடுத்து காட்டாக தொண்டாமுத்தூரில் பெரும் சிரமத்திலிருந்த எங்களையெல்லாம் ஆதரித்து, தொண்டாமுத்தூர் தொகுதியை வெற்றி பெற்று கழகத் தலைவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தன்னுடைய தேர்தல் பிரச்சார பயணத்தை விரிவு செய்து தொண்டாமுத்தூரில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தித் தந்தார், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் "நான் வெற்றி பெறா விட்டாலும் பரவாயில்லை, தொண்டாமுத்தூர் தொகுதியில் கட்சி வெற்றி பெற வேண்டும், கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் ஜெயிக்க வேண்டும்" என்று மேடையில் அவர் பேசியது கழக தொண்டர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவர்க்கும் பெரும் நம்பிக்கையை அன்று அளித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
நான்காவதாக ஒரு நூதனமான அரசியலை, ஒரு சாதாரணமான செங்கல்லை வைத்துக் கொண்டு இதுதான் மதுரை மாவட்டத்தில் உள்ள AIIMS மருத்துவக் கல்லூரி என்று கூறி, பாஜக செய்த சூழ்ச்சிகளை, அடிமை அதிமுகவின் முகத் திரைகளைக் கிழித்து சாமானியர்க்கும் புரியும் படி, பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றார். குறிப்பாகத் தேர்தல் பிரச்சார காலத்தில் பல ஆயிரம் இளைஞர்களை AIIMS மருத்துவமனை எங்கே? என்று எதிர்க் கட்சியினர், கேள்வி எழுப்பும் அளவுக்கு பாஜகவின் பொய் பிரச்சாரத்தைச் சிதற அடித்தவர்.
ஐந்தாவதாக, எதிர்க் கட்சியில் இருப்பவர்கள், குறிப்பாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களோ, பாஜகவைச் சேர்ந்தவர்களோ, நமது கழகத்தின், நமது ஆட்சியில் நாம் யாரை அமைச்சர் ஆக்க வேண்டும், கூடாது என்று கருத்து கூறுவதற்கு எந்த அருகதையும் இல்லாதவர்கள். எந்த உரிமையும் எதிர்க் கட்சியினருக்கு கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாம் பெரும்பான்மை பெற்று உள்ளோம்.
ஏன் எதிர்க் கட்சியினர் அருகதை இல்லை என்றால்? அரசியல் நாகரிகம் அற்ற செயல்களில் ஈடுபடக் கூடிய ராஜேந்திர பாலாஜி, கொள்ளை அடிப்பதையே முழு நேர வேலையாக வைத்து இருந்த SP வேலுமணியைப் போன்றவர்களை எல்லாம் அவர்கள் கட்சியில் அமைச்சராக வைத்துக் கொண்டு வெட்கம் இல்லாமல் வலம் வந்தவர்களுக்கு, நமது கழகத்தின், பொற்கால ஆட்சியில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சர் ஆக்க வேண்டுமா? இல்லையா? என்பதைப் பற்றிப் பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் கிடையாது.
அடுத்து பாரதிய ஜனதா கட்சி, தேசிய கட்சியாக அவர்களின் மத்திய அமைச்சர்கள் எந்த அறிவும் இல்லாமல், பாராளுமன்றத்தில் கோஷம் போடுவதும் ஜெய்ஹிந் கூறுவதும், மக்கள் பிரச்சனைகளான NEET மற்றும் பல மசோதாக்கள் குறித்து எதிர் கட்சியினர் விவாதிக்க முற்படும் போது கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி, மக்களை ஏமாற்றிப் பிழைப்பதையே முழு நேரத் தொழிலாக வைத்து இருக்கக் கூடியவர்கள். பாஜகவிற்குத் தகுதியைப் பற்றிப் பேசுவதற்கோ அல்லது நாம் யாரை அமைச்சர் ஆக்குவது என்பது குறித்த முடிவை விமர்சிப்பதற்கோ எந்த யோக்கியதையும் இல்லாதவர்கள். ஆதலால் அவர்களுடைய கருத்துக்களுக்கு எல்லாம் நாம் எந்த வித முக்கியத்துவமும் அளிக்க வேண்டியது இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஜனநாயக கட்சி . ஜனநாயக கோட்பாடுகளை முன்னிறுத்தி சமூக நீதி போன்ற விடயங்களில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இருக்கப் பாடுபடக் கூடிய ஒரு கழகம்.
தொடர்ந்து 70 ஆண்டு காலமாக நமது கட்சி இந்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காக, பெருமைகளை இழந்து கல்வி வேலை வாய்ப்பு போன்ற விடயங்களை மீட்டு எடுப்பதற்காக உருவாக்கப் பட்ட ஒரு இயக்கம். அந்த பேர் இயக்கத்தை 50 ஆண்டுக் காலத்திற்கும் மேல் தலைமை தங்கி வழி நடத்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
தலைவர் கலைஞர் அவர்களின் "ஸ்டாலின் என்றல் உழைப்பு " என்ற வாக்கிற்கு ஏற்ப தங்களின் தலைமையில் இதுவரை தமிழகம் காணாத ஒரு பொற்கால ஆட்சியில் தமிழர்கள் நலம் பெற்று வருகின்றனர். அந்த ஆட்சியின் தொடர்ச்சியாகத் தலைமையின் பிரதிநிதியாகத் உதய நிதி ஸ்டாலினை தங்கள் அமைச்சர் அவையில், அமைச்சர் பொறுப்பை வழங்கி, தங்களுடன் இணைந்து பணியாற்றி தமிழர்களின் வாழ்வு சிறக்கப் பொற்கால ஆட்சியில் இன்னும் பல சாதனைகள் தொடர, வாய்ப்பு வழங்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.