‛மந்தமும் இல்லை... மாந்தமும் இல்லை...’ அணை கேள்விக்கு அமைச்சர் துரை முருகன் பதில்!
தமிழ்நாடு அரசின் மந்த நிலையை கருதிதான் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுகிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எங்களுக்கு மந்தமும் இல்லை மாந்தமும் இல்லை என துரைமுருகன் பதிலளித்தார்.
தமிழ்நாட்டின் நீர்வள பிரச்னைகள் குறித்து டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் சொக்காவத்தை சந்தித்து பேசிய பின் தமிழ்நாடு இல்லத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செக்காவத் உடனான பேச்சுவார்த்தை மிக சுமூகமாக முடிந்தது. அவர் மிக அன்னோன்யமாக பழகினார். நாங்கள் கொண்டு சென்ற பிரச்னைகள் குறித்து அவர் ஏற்கெனவே நன்றாக தெரிந்து வைத்திருந்தார்.
காவிரி ஆற்றின் நீர்பகிர்மானம் தொடர்பாக உச்சநீதிமன்ற அளித்த உத்தரவுப்படி கர்நாடக அரசு மாதவாரியாக தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய 50 டிஎம்சி நீரில் 10 டிஎம்சி நீர் கூட இன்னும் கிடைக்கவில்லை எனவே கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்கு நீர் தர உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமானப்பணியை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாலும் தமிழக அரசை கேட்டுத்தான் மேற்கொள்ள வேண்டும் என தீர்பாய உத்தரவிலும் உச்சநீதிமன்ற உத்தரவிலும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு தற்போது காவிரியின் குறுக்கே கட்டிவரும் மேகதாது அணையை கட்டுவது தொடர்பாக எங்களிடம் அனுமதியோ, தகவலையோ சொல்லாமல், மத்திய நீர்வளத்துறையை நேரடியாக அனுகி அனுமதியை பெற்றுள்ளதை கஜேந்திரசிங் செக்காவத்திடம் கூறினேன். அதற்கு பதிலளித்த அவர், நீர்வளத்துறையிடம் அனுமதி வாங்குவதால் மட்டுமே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டிவிட முடியாது என என்னிடம் விளக்கினார். மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து நிச்சயமாக தமிழக அரசின் கருத்துகளை கேட்போம் என உறுதி அளித்துள்ளார்.
தென்பெண்ணையாற்றின் கிளைநதியான மார்கண்டேய நதியின் குறுக்கே தமிழக அரசின் அனுமதி கேட்காமல் கர்நாடக அரசு அணை கட்டி வருகிறது. தென்பெண்ணையாற்று பிரச்னை தொடர்பாக நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டநிலையும் இன்னும் நடுவர் மன்றம் அமைக்கப்படாமல் உள்ளது. தென்பெண்ணை ஆற்றுக்கான நடுவர் மன்றம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய நீர்வளத்துறை எடுக்கும் என உறுதி அளித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்
முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த உச்சநீதிமன்றம் கூறிய மூன்று அளவீடுகளையும் தமிழக அரசு செய்து முடித்துவிட்டது. முல்லை பெரியாறு அணையின் அருகே உள்ள பேபி அணைய பலப்படுத்திவிட்டு, அணையின் உயரத்தை 142 அடி உயரத்தில் இருந்து 152 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தும் கேரள அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பேபி அணையின் அருகே நான்கு மரங்கள் உள்ளதால் அதனை வெட்ட கூடாது என கேரள அரசு அடம்பிடிப்பது குறித்தும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன்.
கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் உள்ள நிலையில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது அதற்கான நிதியையும் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். மேலும் தாமிரபரணி-கருமேணி ஆறு திட்டத்தை மத்திய அரசு ஒத்துக் கொண்ட பிறகு அதற்கான நிதியை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மந்த நிலையை கருதிதான் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுகிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எங்களுக்கு மந்தமும் இல்லை மாந்தமும் இல்லை என துரைமுருகன் பதிலளித்தார்.