Kanchipuram Fire Accident: காஞ்சிபுரம் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம்; முதலமைச்சர் அறிவிப்பு..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட, ஓரிக்கை குருவிமலை பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான " நரேன் ஃபயர் ஒர்க்ஸ்" என்ற பெயரில் பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் மற்றும் பட்டாசுகள் பாதுகாத்து வைக்கப்படும் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் நாட்டு பட்டாசுகள் என சொல்லக்கூடிய, குறிப்பாக திருவிழா காலங்களில் பயன்படுத்தக்கூடிய அதிர்வெட்டுகள், வண்ண பட்டாசுகள், வானம் , சரம் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற வெடிவிபத்தில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளர். மேலும் 20க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில்,”காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், ஓரிக்கை கிராமப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் இன்று (22.3.2023) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திரு.பூபதி (வயது 57), திரு.முருகன் (வயது 40), திருமதி.சசிகலா (வயது 35), திருமதி.தேவி (வயது 32), திரு.சுதர்சன் (வயது 31), திருமதி. வித்யா (வயது 30) மற்றும் அடையாளம் காணமுடியாத மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் கடும் காயமடைந்து உயர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.