Kalakshetra Row: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார்.. நடனப் பேராசிரியர் ஹரிபத்மன் கைது..
முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில், கலாஷேத்ரா கல்லூரி பேராசியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில், கலாஷேத்ரா கல்லூரி பேராசியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை புகாரில் கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மனை ஹைதராபாத்தில் சென்னை காவல்துறை கைது செய்தது.
இந்த குற்றச்சாட்டில் ஹரிபத்மன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் சுற்றுலா சென்ற இடத்தில் தலைமறைவானார். இந்த விவாரகாரத்தில் ஏராளமான மாணவில் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வரும் 6 ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காலாஷேத்ரா விவரகாரம் - என்ன நடந்தது?
சென்னை திருவான்மியூரில் காலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணிதேவி கல்லூரி கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் செயல்படுகிறது. பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை சேர்ந்த பல முக்கிய கலைஞர்களை நம் நாட்டிற்கு வழங்கிய பெருமை இந்த நிறுவனத்திற்கு உண்டு. இதனால், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, கலாஷேத்ரா தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இங்கு பல பிரிவினைகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரியில் உள்ள ஆசிரியர் மீது ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது வதந்தி என்று கூறப்பட்டு வந்தது. கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கிய கதாப்பாத்திங்களில் நடிக்க வேண்டுமானால், ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஆசிரியர் மிரட்டியதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மாணவிகளுக்கு தடை:
ஒருவருக்கு வாய்ப்பை வழங்கவும், தடுக்கவும் முடியும் அளவிற்கு அந்த ஆசிரியருக்கு கலாஷேத்ராவில் அதிகாரம் உள்ளதாகவும் மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது, மாணவிகள் கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரனிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் கலாஷேத்ராவின் பெருமையைச் சீர்குலைக்கும் விதத்தில் பரப்பப்பட்டு வரும் கட்டுக்கதைகள் என்றும், இனி மாணவர்கள் இச்சம்பவம் குறித்துப் பேசவோ, இணையத்தில் கருத்துகள் பகிரவோ கூடாது என்றும் கலாஷேத்ரா நிர்வாகம் மாணவிகளுக்கு தடை விதித்ததாகவும் தகவல்கள் கிடைத்தன.
c.a.r.e.spaces மூலம் புகார்:
மாணவிகள் எந்த ஆசிரியருக்கு எதிராக புகார் அளித்தனரோ அந்த நபர், சர்வதேச மகளிர் தினத்தன்று கலாஷேத்ராவில் கவுரவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகுதான், இந்தியக் கலைஞர்களுக்காக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் 'கேர்ஸ்பேசஸ்' (c.a.r.e.spaces) எனும் அமைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவிகள், கலாஷேத்ராவில் நடந்து வரும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் தற்போது பயின்று வருபவர்கள் மட்டுமின்றி, முன்னாள் மாணவர்கள் பலரும் பாலியல் புகார்களை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆதாரங்களை திரட்டிய 'கேர்ஸ்பேசஸ்' அமைப்பு, தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்தது.
தேசிய மகளிர் ஆணையம் புகார்
”கேர்ஸ்பேசஸ்” அமைப்பு வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம், தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்தது. அதில், ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை காவல் ஆணையருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். கல்லூரி மாணவிகள் 30 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். பாலியர் புகார் அளிக்கப்பட்டவர் இன்று மதியம் 12 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.