jayalalithaa: ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவுநாள்..! சமாதியில் குவியும் அ.தி.மு.க. தொண்டர்கள்..! கண்ணீர்மல்க அஞ்சலி..
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுகவினர் அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அ.தி.மு.க.வினர் அவரது நினைவிடத்திலும், பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலைகள் மற்றும் அவரது புகைப்படத்திற்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா நினைவு நாள் இன்று
ஜெ. ஜெயலலிதா பிப்ரவரி 24 1948 பிறந்தார். முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் (டிசம்பர் 5 2016) முதலமைச்சராக இருந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை ‘புரட்சித் தலைவி' எனவும் 'அம்மா' எனவும் இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டார். அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது 6-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தற்போது பழனிசாமி, பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் 3 அணியாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் தனித்தனியே மரியாதை செலுத்த உள்ளனர்.
அமைதி ஊர்வலம்
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் அமைதி ஊர்வலமாக சென்று, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று காலை 10 மணிக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.
இதனால் பேரணி செல்லும் பகுதியில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க மாநகர காவல்துறை சார்பில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அதன்படி, வாலாஜா சாலை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளில் போலீசாரை நிறுத்தி, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மலர்களால் அலங்கரிப்பு
ஜெயலலிதாவின் 6-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் மலர்களால் அலகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களில் ஜெயலலிதா படத்தை வைத்து மலர்களால் அலகரித்து அதிமுக நிர்வாகிகள் மரியாதை செல்லுத்துகின்றனர்.
தனித்தனியாக மரியாதை
ஜெயலலிதாவின் 6-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி காலை 10 மணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கும், டிடிவி தினகரம் நண்பகல் 11 மணிக்கும், சசிகலா நண்பகல் 11.30 மணிக்கு ஆகியோர் தனித்தனியாக மரியாதை செலுத்த உள்ளனர்.