![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jayalalithaa Schemes :பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களில் சாதித்த முதலமைச்சர்.. ஜெ. பிறந்தநாள் சிறப்புப்பதிவு
பெண்ணாய்ப் பிறந்ததால் அவர்களின் தேவையைக் கூடுதலாய் உணர்ந்தவர், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது பெண்களுக்கான முன்னோடித் திட்டங்கள் பலவற்றைக் கொண்டு வந்தார்.
![Jayalalithaa Schemes :பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களில் சாதித்த முதலமைச்சர்.. ஜெ. பிறந்தநாள் சிறப்புப்பதிவு Jayalalitha Birthday List of welfare schemes implemented by former cm jayalalithaa for women know details Jayalalithaa Schemes :பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களில் சாதித்த முதலமைச்சர்.. ஜெ. பிறந்தநாள் சிறப்புப்பதிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/23/4d72006b3e329cea82e1afe6178774d5_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தின் முதல் இளம் முதல்வர், 2ஆவது பெண் முதல்வர், மாநில வரலாற்றிலேயே அதிக முறை (6 தடவை) முதல்வராக இருந்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரின் 74ஆவது பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 24) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பெண்ணாய்ப் பிறந்ததால் அவர்களின் தேவையைக் கூடுதலாய் உணர்ந்தவர், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது பெண்களுக்கான முன்னோடித் திட்டங்கள் பலவற்றைக் கொண்டு வந்தார். அவற்றின் தொகுப்பு இதோ.
தொட்டில் குழந்தைத் திட்டம்
தான் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டிலேயே (1992ஆம் ஆண்டு) தொட்டில் குழந்தை திட்டத்தைத் தொடங்கினார் ஜெயலலிதா. இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் கொலையைத் தடுக்க இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், பின்னர் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்படுகின்றன. தொட்டில்களில் இடப்படும் குழந்தைகள் தமிழ்நாடு அரசு தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்படுகின்றனர். பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் உள்ள பெற்றோரும் இத்திட்டத்தின்கீழ், குழந்தையை அரசிடம் ஒப்படைக்கின்றனர்.
![Jayalalithaa Schemes :பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களில் சாதித்த முதலமைச்சர்.. ஜெ. பிறந்தநாள் சிறப்புப்பதிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/23/de3d8af02ad238e3a5a893aaca234e31_original.webp)
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
குடும்பம் ஆண் வாரிசால்தான் முழுமை பெறும் என்ற கருத்தை மாற்றவும் பெண் குழந்தைகளின் மதிப்பை உயர்த்தவும் குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கவும் ஜெயலலிதா சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின்படி ஒரு குடும்பத்தில் ஒற்றைப் பெண் குழந்தை மட்டும் இருந்தால், அந்தக் குழந்தையின் பெயரில் வங்கியில் ரூ,50,000 வைப்புத் தொகையும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25,000 வைப்புத் தொகையும் இருப்பு வைக்கப்படும்.
குழந்தைகளுக்கு 18 ஆண்டுகள் பூர்த்தி ஆனவுடன், வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும். எனினும் இந்தத் திட்டத்தைப் பெறுவதற்கு முன்னர், பெற்றோரில் ஒருவர் குடும்பக் கட்டுப்பாட்டை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இலவச சானிட்டரி நாப்கின் திட்டம்
இந்தியாவிலேயே முதன்முறையாக கிராமப்புறப் பெண்களுக்கும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை 2012-ம் ஆண்டு தொடங்கி வைத்தார் ஜெயலலிதா. இந்தத் திட்டத்தின்படி 10 முதல் 19 வயது வரையிலான மாணவிகள், அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் பெண் கைதிகள் ஆகியோர் நலனுக்காக இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் இளம்பெண்களின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு எடை, உயரம், இரும்புச் சத்து கணக்கிடப்பட்டு அவர்களின் நலன் கண்காணிக்கப்படும். வளரிளம் பெண்களுக்கு ரத்த சோகையைத் தடுக்க ஒவ்வொரு பெண்ணிற்கும் வாரந்தோறும் ஒரு இரும்புச் சத்து மற்றும் போலிக் அமில மாத்திரை வழங்கப்படும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மாத்திரையும் வழங்கப்படும்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு
உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்பதுதான் அரசியலில் கால்பதிக்க பெண்கள் எடுத்து வைக்கும் முதல் படி. ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில்தான் 50 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
தாலிக்குத் தங்கம், பணம் திட்டம்
படித்த ஏழைப் பெண்களின் திருமணத்தின்போது தாலிக்குத் தங்கம், பணம் வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட திட்டம். எனினும், உதவித் தொகை மற்றும் தங்கத்தின் அளவை உயர்த்தியவர் ஜெயலலிதா. கடைசி முறை முதல்வராகப் பொறுப்பேற்றபோதும், பெண்களுக்கு வழங்கப்படும் தங்கத்தின் அளவை 8 கிராமாக உயர்த்தினார். இத்திட்டம் குடும்பம், கட்டுப்பாடு என்ற கட்டமைப்பை ஊக்குவிக்கிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், இந்தத் தொகையையும், தங்கத்தையும் பெறுவதற்காகவே பெண் குழந்தைகளைப் படிக்க வைத்தோர் பலர் உண்டு.
மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம்
பெண்களுக்கு சமூக, பொருளாதார அடிப்படையில் அதிகாரமளிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டது இந்தத் திட்டம். ஏழைப் பெண்கள் சொந்தக் காலில் நிற்கவும், யாரையும் சார்ந்து வாழாமல் சொந்தமாகத் தொழில் செய்யவும், இந்தத் திட்டம் கடனுதவி அளிக்கிறது.
1989ல் தர்மபுரி மாவட்டத்தில் சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம், மாநிலம் முழுவதும் நீட்டிக்கப்பட்டது. 75 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களை உறுப்பினராகக் கொண்ட மகளிர் சுய உதவிக்குழுத் திட்டத்தை ஊக்கப்படுத்தி வளர்த்தவர் ஜெ.
பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கும் திட்டம்
தமிழ்நாட்டை ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, கிராமங்களில் 5 வயதிற்குட்பட்ட உள்ள குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு, ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெண்களின் உடல் எடையை மாதாமாதம் சரிபார்த்து, அவர்களுக்கு இணை உணவாக ஊட்டச்சத்து மாவு வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார் ஜெயலலிதா.
அம்மா குழந்தைகள் நலப் பரிசுப்பெட்டகம்
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1000 மதிப்புடைய 'அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகம்' வழங்கும் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி வைத்தார் ஜெயலலிதா.
இந்த பரிசுப்பொருளில் பராமரிப்புத் துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, நாப்கின், நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை உள்ளிட்ட ரூ.1000 மதிப்புள்ள 16 வகையான பொருட்கள் இருக்கும். இந்தத் திட்டத்துக்கு விளிம்புநிலைத் தாய்மார்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைத் திட்டம்
தாய்மார்கள் பொது இடங்களிலும் பயணங்களிலும் தங்களின் கைக்குழந்தைகளுக்குப் பாலூட்டும்போது எதிர்கொள்ளும் சிரமத்தைக் கருத்தில்கொண்ட ஜெயலலிதா, அரசு பேருந்து நிலையங்கள், பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தனி அறைகள் அமைக்க உத்தரவிட்டார். இது 2015-ல் நடந்தது. தொடர்ந்து, பச்சிளங்குழந்தைகள் பலரின் பசியும், தாய்கள் பலரின் தவிப்பும் தீர்ந்தது.
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திட்டம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும், பெண்கள் தங்களின் பிரச்சினைகளை தைரியமாக முன்வந்து சொல்லவும் ஏற்ற வகையில், பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை தமிழ்நாடு முழுவதும் தொடங்கினார் ஜெ. பின்னர் ஜெயலலிதா யோசனையின்பேரில் பெண்களை மட்டுமே கொண்ட சிறப்புப் பெண்கள் அதிரடிப் படையும் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது மாவட்டம் மற்றும் வட்டங்கள் வாரியாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறித் திட்டம்
2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ஜெ. வெற்றி பெற்றபிறகு அதை வழங்கியும் காட்டினார். இது வாக்கு அரசியல் என்று கூறப்பட்டாலும், விளிம்புநிலைக் குடும்பங்கள் பலவற்றில் இன்னும் ஜெயலலிதா வழங்கிய மிக்ஸியும் கிரைண்டருமே, அவர்களின் அன்றாடத்தைச் சிக்கலில்லாமல் நகர்த்திக் கொண்டிருக்கின்றன.
இவை தவிர பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட 13 அம்சத் திட்டம், 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவ சேவை அளிக்கும் திட்டம், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் எழுத்தறிவுத் திட்டம், மகளிர் தொழில் முனைவோருக்கான பிரத்யேக தொழிற்பேட்டைகள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகியவற்றையும் அமைத்தார் ஜெயலலிதா.
அதேபோல அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பு, விலையில்லா கறவைப் பசு, வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் என மகளிர் முன்னேற்றத்திற்கான எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளார் ஜெயலலிதா.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)