Jayakumar: ”ஓ.பி.எஸ், தினகரன், சசிகலா பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” - ஜெயக்குமார் பேட்டி...!
ஓ.பன்னீர்செல்வம், தினகரன் மற்றும் சசிகலா குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வில் அடுத்தடுத்து எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
”அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி”
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, ” 2024-ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமையும். ஓ.பி.எஸ். சசிகலா, தினகரன் குறித்து பேசி எங்களது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அவர்களைப் பற்றி ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கவும் இல்லை. பிரச்சினை இல்லாத விஷயம் குறித்து நாங்கள் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.
”அ.தி.மு.க.வில் எந்த பிரச்சனை இல்லை”
மேலும், அ.தி.மு.க.வில் எந்த பிரச்சினையும் இல்லை; அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளோம். எங்கள் நோக்கம் 40 தொகுதிகளில வெற்றி பெற வேண்டும் என்பது மட்டும்தான். தேர்தல் பணிகளை அ.தி.மு.க.வினர் முழுவீச்சில் தொடங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு விடியல் இல்லை"
20 மாத கால திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பத்திற்கு தான் விடியலே தவிர தமிழகத்திற்கு இல்லை. சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது. திமுக அரசின் மக்கள் விரோத போக்குகளை மக்களிடம் எடுத்துச் சென்று மக்கள் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறார்கள்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், "2024-ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலிலும் இணைந்து வந்தால் மிகவும் நல்லது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை கூட்டணியில் தான் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஓபிஎஸ் அளித்துள்ள வக்கீல் நோட்டீஸ் எந்த வகையிலும் எடுபடப் போவதில்லை. அதனால் எந்த தாக்கமும் இருக்காது.
அதிமுக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு இது சரியான நேரமில்லை. தொகுதி பங்கீடுகள் அனைத்தும் அதிமுக தலைமை முடிவு செய்வது தான்" என்றார்.
மேலும் வாசிக்க..






















