ஜவ்வாதுமலையில் சாகச சுற்றுலா தளம் ! அமைச்சர் தந்த அதிரடி அப்டேட்.... குஷியில் சுற்றுலா பயணிகள் !
திருவண்ணாமலை : ஜவ்வாது மலையானது இயற்கை எழில் நிறைந்த சுற்றுலாத்தலம். 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கல்லாயுதங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை : ஜவ்வாதுமலையில், 2.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பலாமரத்துார் கிராமத்தில் சாகச சுற்றுலா தலம் அமைக்கும் பணி நடந்து வருவதாக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.
ஜவ்வாதுமலையில் சாகச சுற்றுலா தலம்
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில், 25வது கோடை விழா நேற்று தொடங்கியது. பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர், தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
அமைச்சர் வேலு பேசியதாவது., ஜவ்வாதுமலையில், 2 கோடியே, 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பலாமரத்துார் கிராமத்தில் சாகச சுற்றுலா தலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாத்தனுார் அணை பகுதியில் ஓய்வறைகள், பூங்கா மற்றும் சுற்றுலா அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. ஜவ்வாதுமலை ஆதிசிவன் கோவில் புனரமைக்கும் பணிக்கு, 2 கோடியே, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி முதல் சென்னை வரை எத்தனையோ திட்டங்களை நெடுஞ்சாலை துறை சார்பில் நிறைவேற்றி இருக்கிறோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தமிழகத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, ஜவ்வாது மலையானது இயற்கை எழில் நிறைந்த சுற்றுலாத்தலம். 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கல்லாயுதங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றார்.
ஜவ்வாது மலை
நவிர மலை அல்லது ஜவ்வாது மலை என்பது கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்து வரும் மலைத்தொடர் ஆகும். இம்மலைத் தொடர்கள் வேலூர் , திருப்பத்தூர் , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 262 ச.கி.மீ பரப்பில் 250 கி. மீ. சுற்றளவில் அமைந்துள்ளது. இந்த மலைப் பகுதிகளில் சுமார் இரண்டு இலக்கம் மக்கள் வசிக்கின்றனர். இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும். இம்மலைத்தொடரில் உள்ள பீமன் அருவியும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவலூர் வானியல் ஆய்வகமும் முதன்மை சுற்றுலா இடங்களாகும்.
இம்மலையிலிருந்து செய்யாறு, நாகநதி, கமண்டல நதி மிருகண்டாநதி ஆகிய ஆறுகள் உற்பத்தியாகின்றன. இம்மலையின் அடிவாரத்தில் படவேட்டிற்கு அருகில் செண்பகத் தோப்பு அணையும் மேல்சோழங்குப்பம் அருகில் மிருகண்டாநதி அணையும் கட்டப்பட்டு அவற்றையும் சுற்றுலா இடமாக தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. ஜவ்வாது மலையின் மேல் கோமுட்டேரி என்ற படகு குழாமும், உள்ளது.
ஜவ்வாது மலைத்தொடர் கிழக்கு மேற்காக உள்ளது . மேலும் வடபகுதி தென்பகுதி என இரண்டாக உள்ளது. போளூர் வட்டம், தென்மாதிமங்கலம் அருகே உள்ள பர்வத மலை சிவன் கோயிலும் படவேடு அருகில் உள்ள கோட்டை வரதர் ஆலயமும் இம்மலைத்தொடரில் அமைந்த சிறப்பு வாய்ந்த கோயில்களாகும். போளூர், செங்கம், சமுனாமரத்தூர், கலசப்பாக்கம், வேலூர், திருப்பத்தூர் வட்டங்களைச்சார்ந்த 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன. இம்மலைவாழ் மக்களில் பெரும்பகுதியினர் மலையாளி என்ற பழங்குடி இனத்தவராவார்கள். இவர்களது முக்கியத் தொழில் வேளாண்மையாகும், இங்கு பழ வகைகள், சாமை, வரகு, தேன், கடுக்காய்,தினை போன்றவை முக்கிய வேளாண்மை உற்பத்திப் பொருட்களாகும். இம்மலையில் மிகச்சிறப்பு வாய்ந்தது சந்தன மரங்களாகும்.






















