Makkal Needhi maiam controversy | ’களையெடுக்கவேண்டியவர்களில் முதல் நபர் மகேந்திரன்’ - மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பதில் அறிக்கை..
களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் இருந்தார்கள். துரோகிகளைக் களையெடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்தக் குரல். அப்படிக் களையெடுக்கவேண்டியவர்களில் முதல் நபர் மகேந்திரன். - மநீம தலைவர் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டாக்டர் ஆர்.மகேந்திரன் ’களையெடுக்கவேண்டிய துரோகி’ எனக் குற்றம்சாட்டியுள்ளார். 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாததை அடுத்து அந்தக் கட்சிக்குள் தொடர்ந்து சலசலப்பு நிலவி வந்தது. இதற்கிடையே கட்சியின் முன்னணி உறுப்பினர்களான சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ், சி.கே.குமரவேல் மற்றும் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் ஆகியோர் கட்சியிலிருந்து விலகுவதாகவும் கட்சிப் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தனர்.
இதையடுத்து மகேந்திரன் வெளியிட்டிருந்த அறிக்கையில் கமல்ஹாசன் ஜனநாயகமற்றுச் செயல்பட்டதாகவும். அவருக்கு கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் பணிகளுக்காக உதவி வந்த சங்க்யா சொல்யூஷன்ஸ் நிறுவனம் கட்சி உறுப்பினர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியதாகவும் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இதற்கு பதில் அறிக்கை வெளியிட்டிருக்கும் கமல்ஹாசன் ‘மகேந்திரன் கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களை மகேந்திரன் தலையெடுக்கவிடாமல் செய்தார். களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் இருந்தார்கள். துரோகிகளைக் களையெடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்தக் குரல். அப்படிக் களையெடுக்கவேண்டியவர்களில் முதல் நபர் மகேந்திரன். ஒரு களையே தன்னைக் களையென்று புரிந்து தன்னைத் தானே நீக்கிக் கொண்டதில் மகிழ்கிறேன்’ எனக் காரசாரமாக பதிலளித்திருந்தார். மக்கள் நீதி மய்யத்தில் தொடரும் இந்த உட்கட்சி மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.