TN Higher Official: ஒரே நேரத்தில் மாற்றம் கண்ட தமிழகத்தின் முக்கிய ஆளுமைகள்..! களத்தில் உள்ள முக்கிய சவால்கள் என்ன?
தமிழ்நாடு தலைமை செயலாளர், சட்ட - ஒழுங்கு டிஜிபி மற்றும் சென்னையின் காவல் ஆணையர் ஆகியோர் ஒரே நேரத்தில் மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் முன் உள்ள சவால்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
தமிழ்நாடு நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளான தலைமை செயலாளர், சட்ட - ஒழுங்கு டிஜிபி மற்றும் தலைநகர் சென்னையின் காவல் ஆணையர் ஆகியோர் ஒரே நேரத்தில் மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் முன் உள்ள சவால்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
நிர்வாக கட்டமைப்பு:
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தான் அரசு இயந்திரமாக கருதப்படுகின்றனர். ஆனால், அந்த இயந்திரம் எந்தவித பிரச்னையும் இன்றி முறையாக செயல்பட வேண்டும் என்றால், அரசு அதிகாரிகளின் செயல்பாடு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களில் தலைமை செயலாளர், சட்ட-ஒழுங்கு டிஜிபி மற்றும் தலைநகர் சென்னையின் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் இன்றியமையாதவர்கள் ஆவர். அந்த மூன்று முக்கிய பதவிகளுக்கு தான் தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் மூன்று புதிய நபர்கள் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளனர்.
தலைமை செயலாளர்:
கடந்த 2021ம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தபோது, இறையன்பு தமிழக அரசின் தலைமை செயலாளராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தான், அவர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் முன்னிலையில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் இருந்தாலும், அதில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
காலிப்பணியிடங்கள்:
மக்களுக்கான சேவைகளை செய்வதற்காக அரசு தரப்பில் பல்வேறு துறைகள் இருந்தாலும், அதில் போதுமான அளவில் ஊழியர்கள் இல்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவம், மின்சாரம் மற்றும் கல்வி என்பவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டியதும் தலைமை செயலாளரின் முன் உள்ள முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
அதன் மூலம் மக்களுக்கான சேவைகள் தடையின்றி கிடைக்கப்படுவதை உறுதி செய்ய முடியும். அதோடு, பல்வேறு துறைகளை சேர்ந்த அரசுப் பணியாளர்கள் முன் வைத்து வரும் கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மேலும் தமிழக அரசு முன்னெடுத்த மழைநீர் வடிகால்களை அமைப்பது போன்ற, உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டியுள்ளது.
புதிய டிஜிபி:
தலைமை செயலாளரை தொடர்ந்து சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக இருந்த சைலேந்திர பாபுவும் ஓய்வு பெற்றதால், அந்த பதவிக்கு சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில காலங்களாக நடந்து வரும் செயல்களால், சட்ட-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதனை மேம்படுத்த வேண்டியது புதிய டிஜிபி முன்பு உள்ள மிக முக்கிய சவாலாகும்.
சட்ட - ஒழுங்கு நிலை பெறுமா?
கோவை கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் என்பது திமுக அரசின் பெரும் கரும்புள்ளி ஆக உள்ளது. அதோடு, வேங்கைவயல் சம்பவம் போன்ற சாதியக் கொடுமைகள், கூலிப் படைகள் நிகழ்த்தும் கொலைகள், சமூக விரோதக் கும்பல்களுக்குள் பழிக்குப்பழியாக நடக்கும் குற்றங்கள், கோவை நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம், மணல் கொள்ளையைத் தடையின்றி தொடரவும், தட்டிக்கேட்பவர்களை அச்சுறுத்தவும் கொலை செய்யவும் தயங்காத மணல் மாஃபியாக்கள், ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் நடத்தும் அராஜகம் என தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கு என்பது உண்மையாகவே கேள்குவிக்குறியாக தான் உள்ளது. இவற்றை நிலைநிறுத்த புதிய டிஜிபி சங்கர் ஜிவால் கட்டாயம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது.
சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையர்:
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் டிஜிபி ஆக பொறுப்பேற்ற நிலையில், சென்னையின் 109-வது காவல் ஆணையராக போலீஸ் அகாடமி டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். தலைநகர் சென்னையில் நிலவும் சட்ட-ஒழுங்கு என்பது தான் மாநிலம் முழுவதும் எப்படி சட்ட-ஒழுங்கு நிலவுகிறது என்பதற்கான உதாரணமாக கருதப்படுகிறது.
பட்டப்பகலில் நடக்கும் கொள்ளைகள்:
மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசாங்க இயந்திரமே அமைந்துள்ள தலைநகர் சென்னையிலேயே, பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி உள்ளது. பட்டப்பகலிலேயே இருசக்கர வாகனங்களில் வந்து செயினை பறித்து செல்லப்படுகிறது, கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை எல்லாம் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. டிக்கெட் எடுக்கச் சொன்ன அரசுப் பேருந்து ஓட்டுநரை கத்தியால் குத்தியது போன்ற ரவுடிகளின் அட்டகாசமும் அதிகரித்து காணப்படுகிறது. இதுபோன்ற குற்றச்சம்பவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சென்னையின் புதிய காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இருக்கிறார்.
திமுக அரசுக்கு விடிவுகாலமா?
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மீது சட்ட-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் தான், தமிழக அரசு இயந்திரத்தின் மிக முக்கிய அதிகாரிகளான தலைமை செயலாளர், சட்ட-ஒழுங்கு டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகிய, அரசின் மூன்று முக்கிய வழிகாட்டிகள் புதியதாக பொறுப்பேற்றுள்ளனர். இவர்களின் உதவியுடன் தமிழக அரசு எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.