அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் சங்கத் தலைவர் நான்தான்... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அசத்தல் பேச்சு...
"தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் துறைத்தலைவர் நான்தான். அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் சங்கத்தலைவரும் நான்தான்" என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற அன்பில் என்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மத்தியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களும் பல்வேறு கோரிக்கைகளுடன் தினம் தினம் என்னைச் சந்தித்துக்கொண்டே இருக்கின்றனர்.
அவர்களுடைய அனைத்துக் கோரிக்கைகளும் உரிய முறையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, கோரிக்கைகளின் தன்மை அடிப்படையில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் பணி சார்ந்த, பள்ளி சார்ந்த , ஊதியம் சார்ந்த பிரச்சினைகள் என தனிப்பட்ட முறையில் இருக்கின்றன.
ஆசிரியர்கள் அத்தனை பேரும் சங்கங்களையோ, என்னையோ நேரடியாகச் சந்தித்து, கோரிக்கைகளை அளிப்பது சிரமம் என்பதால்தான், ஆசிரியர் மனசுப் பெட்டியை எனது இல்லத்திலும், அலுவலகத்திலும் வைத்திருக்கும் நான், அங்கு வரமுடியாதவர்கள் இருந்த இடத்திலேயே இருந்து தங்களது கோரிக்களை அனுப்ப aasiriyarmanasu@gmail.com, aasiriyarkaludananbil@gmail.com என்னும் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளையும் வெளியிட்டு இருக்கின்றேன்.
இதில் வரும் கோரிக்களைப் பரிசீலித்து, எனக்கு அனுப்ப தனி அலுவலகத்தை மாநிலத்தின் மையப்பகுதியான திருச்சியில் அமைத்து, அதற்கென தனிப் பணியாளர்களையும் நியமித்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர ஆசிரியர்களின் கோரிக்கைகளைத் கேட்க வேண்டியதும், தீர்க்க வேண்டியதும் எனது கடமையெனக் கருதுவதால்தான், ஆசிரியர்களுடன் அன்பில் என்னும் நிகழ்வின் மூலம் ஒவ்வொரு மாவட்டமாக ஆசிரியர்களை நானே தேடிச் சந்தித்து வருகின்றேன்.
இன்று 4 வது மாவட்டமாக தஞ்சாவூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி, விரைவில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடரும். தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் துறைத்தலைவர் நான்தான். அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும்
சங்கத்தலைவரும் நான்தான்.
ஆசிரியர்களுடன் அன்பில் 4-வது நிகழ்வாகத் தஞ்சாவூர் மாவட்ட ஆசிரிய பெருமக்களைச் சந்தித்து உரையாடினேன்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) September 24, 2022
ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கை என்பது எனது கோரிக்கையைப் போன்றது!
தஞ்சை மாவட்ட மைய நூலகத்தைப் பற்றிய கோரிக்கையினை மேடையில் சொன்னார்கள்.
1/2 pic.twitter.com/WAuKYSeLR8
என்னிடம் வரும் அத்தனை கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் கொண்டு சென்று, உரிய தீர்வுகளைப் பெற்றுத்தருவது என் கடமை. அதனைத்தான் முதலமைச்சர் எனக்கு கட்டளையாகப் பிறப்பித்திருக்கின்றார். ஒவ்வொரு ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்ச்சி நிறைவுற்ற பிறகும், இங்கு பெறும் கோரிக்களை முதலமைச்சரிடம் கொண்டு சேர்ப்பதை எனது முக்கியப் பணிகளில் ஒன்றாகக் கொண்டிருக்கின்றேன்" என்றார்.
இந்நிகழ்வில் தமிழ்நாட்டு அரசின் தலைமைக்கொறடா கோவி செழியன், மாநகர ஆணையர் சரவண குமார், தேசிய நல்லாசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், ஆசிரியர் மனசு திட்ட இயக்குனர் சிகரம்சதிஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.