Governor Tea Party: ”அரசு விழாக்களை புறக்கணிப்பதா?" - தேநீர் விருந்து புறக்கணிப்பால் கொந்தளித்த தமிழிசை..!
கருத்து மோதல்கள் இருக்கலாம். அதற்காக அரசு விழாக்களை புறக்கணிப்பதாக கூறுவது கவலை அளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Governor Tea Party: கருத்து மோதல்கள் இருக்கலாம். அதற்காக அரசு விழாக்களை புறக்கணிப்பதாக கூறுவது கவலை அளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு:
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் மாளிகையில் நாளை நடத்தும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அவர்தம் பெற்றோரின் கனவுகளை எதிர்கால நல்வாய்ப்புகளை இழந்து வரும் நிலையை உணர மறுத்து தமிழ்நாட்டு ஆளுநர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார் நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று பொதுவெளியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது தமிழ்நாட்டு மாணவர்களையும் இளைஞர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வரும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றிப் பேசுகிறார்.
தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளோர். தமிழர் உயிர் துறப்பதைக் கண்டு கலங்குவர் ஆனால், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் 'அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை" என்பது போல உள்ளது இந்த நிலை மாறவே. பெற்றோர்களை அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன் இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று ஆளுநர் மாளிகையில் அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழிசை காட்டம்:
இதுகுறித்து, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ”அரசாங்கத்தில் நடைபெறும் விழாக்கள் சிறப்பாக நட்புடன் நடைபெற வேண்டும் என்பது எனது கருத்து. தெலுங்கானாவில் நான் அழைக்கும் நிகழ்ச்சிகளுக்கு அம்மாநில முதல்வர் வருவதில்லை. அதை கவலையோடு எதிர்கொள்கின்றேன். அரசு விழாக்களை புறக்கணிப்பதால் வருங்கால சந்ததியினருக்கு என்ன சொல்ல போகின்றோம். கருத்துக்கள் இருக்கலாம். கருத்து மோதல் இருக்கலாம். ஒருவர் கருத்தை ஒருவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. அதற்காக அரசு விழாக்களை கலந்துகொள்ள வில்லை என்றால் இளைய சமுதாயத்திற்கு எதை சொல்ல போகின்றோம். எனவே, ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழ்நாடு புறக்கணிப்பது எனக்கு கவலை அளக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”நீட்டை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்பது கவலையளிக்கின்றது. நான் ஆளுநராக சொல்லவில்லை தமிழகத்தில் வாக்களித்த வாக்காளராக சொல்கின்றேன். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தானே வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள் முடிந்ததா? ஆனால் நீட்டை விலக்க முடியாது என்று தெரிந்தும் பொய் வாக்குறுதியளித்துள்ளார்கள். நீட் தேர்வைப்பற்றி விமர்சனம் செய்யும் அமைச்சர்(உதயநிதி) நீதிமன்றம் செல்லட்டும். அதை விட்டு இதில் விளையாட வேண்டாம். நீட் விவகாரத்தில் எதிர்மறை கருத்துக்களை பரப்ப வேண்டாம். தமிழக மாணவர்கள் வெற்றி பெற ஆரம்பித்து விட்டார்கள், மாணவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து விட வேண்டாம் என்றார்.