’’என் அரசியல் வாழ்க்கையில் இதுவரை யாரையும் நம்பியது இல்லை’’- அமைச்சர் எ.வ.வேலு உருக்கம்
’’சென்னைக்கு மற்றும் மற்ற மாவட்டங்களில் ஆய்வு பணிக்கு செல்லும்போது தனியாக தான் எனது காரில் பயணம் செய்கிறேன்’’
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு யூனியனில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் சேர்மன் மற்றும் துணை சேர்மன் பணி துவக்க விழா தண்டராம்பட்டு யூனியன் அலுவலகத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. இந்த விழாவிற்கு செங்கம் எம்எல்ஏ கிரி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு யூனியன் சேர்மன் அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துத்தார்.
பின்னர் பேசிய எ.வ.வேலு, கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கன மழை கொட்டி தீர்த்துள்ளது. மழை வெள்ளத்தில் தமிழக முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரான நான் உள்ளிட்ட அனைவரும் இரவு பகல் பாராது நேரடியாக மக்களை சந்தித்து வெள்ள பாதிப்புகளை கேட்டறிந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தோம். முதல்வர் ஸ்டாலின் மூன்று மாத ஆட்சியில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில் மக்கள் திமுகவிற்கு 100 சதவீத வெற்றியை தந்துள்ளதாகவும். இந்தியாவிலேயே உள்ளமாநிலங்களுக்கு முன்னோடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்திலேயே 28 கவுன்சிலர்களை கொண்ட தண்டராம்பட்டு யூனியனை இரண்டாக பிரித்து தானிப்பாடி தலைமையிடமாக கொண்டு தனி யூனியன் அலுவலகம் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்கு யூனியன் சேர்மன், துணை சேர்மன் மற்றும் யூனியன் கவுன்சிலர்கள் அனைவரும் இணைந்து தீர்மானங்களை நிறைவேற்றி தந்தால் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தானிப்பாடி தனி யூனியனாக பிரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இவ்வாறு அவர் பேசினார்.
எனது அரசியல் வாழ்க்கையில் இதுவரை நான் யாரையும் நம்பியது இல்லை. சென்னைக்கு மற்றும் மற்ற மாவட்டங்களில் ஆய்வு பணிக்கு செல்லும்போது தனியாக தான் எனது காரில் பயணம் செய்கிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த கட்சி நிர்வாகிகளை மாவட்ட எல்லையிலேயே இறக்கிவிட்டு நான் தனியாக தான் பயணம் செய்வேன் என பேசினார்.