காரில் கடத்தி கொல்லப்பட்ட 13 வயது சிறுவன்.. ஓசூரில் பரபரப்பு.. போராட்டத்தில் இறங்கிய மக்கள்
ஓசூர் அருகே சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ம்பந்தப்பட்ட சிறுவனை கடத்திய சிலரை போலீசார் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (40). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
காரில் கடத்தி கொல்லப்பட்ட சிறுவன்:
இவர்களது, இளைய மகன் ரோகித் (13). அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. சிறுவன் ரோகித்தை அதேபகுதியை சேர்ந்த 22 வயதுள்ள வாலிபர் ஒருவரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் சேர்ந்து நேற்று மாலை காரில் கடத்தி சென்றதாகவும் பின்னர் அவர்கள் அந்த காரை அந்த பகுதியில் விட்டுவிட்டு வேறு ஒரு காரில் சிறுவனை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது.
ரோகித் கடத்தப்பட்டதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் மாவனட்டி கிராம மக்கள் இந்த சம்பவம் குறித்து நேற்று இரவு அஞ்சட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் அங்குள்ள பெட்ரோல் பங்கில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஓசூரில் பரபரப்பு:
கடத்தப்பட்ட சிறுவன் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை அஞ்செட்டி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததாலும் சிறுவனை கண்டுபிடித்து கொடுக்காததாலும் ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. அப்போது, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் கதறி அழுதனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் இறங்கிய மக்கள்:
அதே நேரத்தில் சிறுவன் ரோகித்தை காரில் கடத்தி சென்றவர்கள் அஞ்செட்டி காட்டுப்பகுதியில் உடலை வீசி சென்றதாக தகவல் பரவியது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் சிறுவனின் பெற்றோர் உறவினர்கள் அந்த பகுதிக்கு சென்று உடலை தேடினர்.
அப்போது அங்கு ஒரு இடத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவனை கடத்திய சிலரை போலீசார் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.





















