TN Rain Alert: வெயில் குறையுது... மழை பெய்யுது: 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! சென்னைக்கு எப்படி?
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதி, தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதனை தொடர்ந்து 16 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்று முதல் 16 ஆம் தேதி வரை, அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.
ஈரப்பதம்:
இன்று முதல் 16 ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும் என்றும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிக பட்ச வெப்பநிலை திருப்பத்தூரில் 41.6° செல்சியஸ் மற்றும் ஈரோட்டில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளில் 33° – 37° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 21° – 31° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 36.0° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.9° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
குன்னூர் PTO (நீலகிரி) 12, குன்னூர் (நீலகிரி) 9, சேர்வலாறு அணை (திருநெல்வேலி) 8, மாஞ்சோலை (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி) தலா 7, நாலுமுக்கு (திருநெல்வேலி) 6, பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 5, அழகரை எஸ்டேட் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) தலா 4, செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
12.04.2024 மற்றும் 13.04.2024: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.