Rain Alert: அதி கனமழை எதிரொலி - 9 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த ஊர் தெரியுமா?
அதீத கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருதால், அந்த மாவட்டங்களில் உள்ள சில தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
நீலகிரி
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளுக்கு விடுமுறை.
தென்காசி
தென்காசியில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர்,கடையம், கீழ்பாவூர் ஆகிய வட்டாரங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு தீவிரமடைந்துள்ளது. கேரளா,கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கேரள, கர்நாடக மாநில கடலோர பகுதிகளில் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இடுக்கி, கண்ணூர், பத்தனம்திட்டா, ஆலப்புழா வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கன்னூர், வயநாடு,கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டகளுக்கு ஆரெஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு வானிலை நிலவரம்:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 10 ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஏணா வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை இல்லை என்றாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை என்பது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் எப்போதும் இல்லாத அளவு 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து, அதிகபட்ச வெப்பநிலை என்பது 34.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தொண்டி பகுதியில் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.