வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! புதிய வாகன பதிவு இனி ஈஸி! RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை! முழு தகவல்!
RTO Vechile Registration: "சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்கள் இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது"

NO RTO visits for personal vehicle registration: "சொந்த பயன்பாட்டிற்காக வழங்கப்படும் புதிய வாகனங்களை பதிவு செய்ய, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு, இனி வாகனங்களை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்ற புதிய விதிமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது"
நீண்ட நாள் கோரிக்கை
சொந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்கிய பிறகு, வாகனத்தை பதிவு செய்ய ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு ஒரு நாள் விரயம் ஏற்படுகின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
நாளொன்றுக்கு 8000 வாகனங்கள்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தம் 150 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 150 அலுவலகங்களில் தினமும் சராசரியாக 8000 வாகனங்கள் வரை புதியதாக பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில் சொந்த பயன்பாட்டுக்காக வாங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3000 முதல் 4000 வரை இருக்கின்றன.
இந்தநிலையில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி, "சொந்த பயன்பாடு வாகனங்கள் பதிவின்போது, அவற்றை உரிமையாளர்கள் போக்குவரத்து அலுவலர்களுக்கு கொண்டு வர தேவையில்லை" என சட்டம் திருத்தப்பட்டது. ஆனால் திருத்தப்பட்ட இந்த சட்டம் இதுவரை தமிழகத்தில் அமல்படுத்தப்படாமலே இருந்து வந்தது. சட்டம் அமல்படுத்தப்படாததால், நேரில் இரு சக்கர வாகனங்கள் கொண்டு செல்லும்போது ஒரு சில இடங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் எழுந்தது. கிட்டத்தட்ட சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்களில் 70 சதவீத வாகனங்கள் இரு சக்கர வாகனங்களாக இருக்கிறது.
நீதிமன்ற உத்தரவு
இது தொடர்பாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது: "மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின்படி, சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு கொண்டு வருவதில் விளக்கு அளிக்க வேண்டும்" என மனு அளிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு, சொந்த வாகனங்கள் கொண்டுவர விளக்க அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்திருந்து.
நாளை முதல் அமல்
உயர் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து நாளை (01-12-2025) முதல் அமுல்படுத்த வேண்டும் என அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும், தமிழக போக்குவரத்து துறை ஆணையர் கஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து, வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வணிக பயன்பாட்டிற்கான வாகனங்கள் கட்டாயம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டும்.






















