TN Govt: தென்மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி - வெள்ள நிவாரணமாக ரூ.201.67 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை
TN Govt Flood Relief: தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட, ரூ.201.67 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
TN Govt Flood Relief: தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
தென்மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்:
இதுதொடர்பான அறிவிப்பில், “தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை விட கூடுதலாக ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்பட்டது. அதிகனமழையினை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும். பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை 21.12.2023 அன்று பார்வையிட்டு மிகக் கடுமையான வெள்ள பாதிப்பிற்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தார்.
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியீடு.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/5TQBGPuEnQ
— TN DIPR (@TNDIPRNEWS) February 24, 2024
ரூ.201.67 கோடி ஒதுக்கீடு:
அதன் அடிப்படையில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி. கண்னியாகுமரி விருதநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 1,64,866 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கு 1,96, 374 விவசாயிகள் பயனடையும் வகையில் 160 கோடியே 42 இலட்சத்து 41 ஆயிரத்து 781 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், 38,840 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 62,735 விவசாயிகள் பயனடையும் வகையில் 41 கோடியே 24 லட்சத்து 74 ஆயிரத்து 680 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு 201 கோடியே 67 லட்சத்து 16 ஆயிரத்து 460 ரூபாய் நிவாரண நிதி வழங்கிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி நிவாரணத் தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அண்மையில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டின் போது, தென்மாவட்ட விவசாயிகளுக்கான வெள்ள நிவாரணம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், 2,60,909 விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாண வெளியிட்டுள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.