TN Next DGP : 'தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி’ முதல்வர் மு.க.ஸ்டாலின் மனதில் இருப்பவர் யார்..?
மாவட்ட எஸ்.பி, மாநகர காவல் ஆணையர்கள் என ஒவ்வொரு பதவியிலும் திறமையான, தகுதியான நபர்களை கண்டறிந்து பணியமர்த்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த காவல்துறையையே கட்டுப்படுத்தும் அதிகாரம்கொண்ட சட்டம் ஒழுங்கு டிஜிபியாக யாரை மனதில் வைத்திருக்கிறார் என்ற எதிர்ப்பார்ப்பு காவல்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது
தமிழ்நாட்டின் தற்போதைய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் திரிபாதியின் பதவிகாலம், ஜூன் 30ஆம் தேதியோடு முடிவடைய இருக்கும் நிலையில், அடுத்த டிஜிபியாக யார் நியமனம் செய்யப்படப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Head of the Police Force என்ற காவல்துறையின் உச்சப்பட்ச அதிகாரம் உடைய டிஜிபி பதவியை பெற கடுமையாக போட்டி நிலவி வரும் நிலையில், 11 பேர் கொண்ட பட்டியலை UPSC எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பியிருக்கிறது தமிழ்நாடு அரசு. ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரியையும் கவனமாக தேர்வு செய்து முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒட்டுமொத்த காவல்துறையையும் கட்டுப்படுத்தக்கூடிய தலைமை பொறுப்பான டிஜிபிக்கு யாரை நியமனம் செய்ய பரிந்துரைக்கபோகிறார் என்ற ஆவல் மேலோங்கியுள்ளது.
ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரிக்கும் மாநிலத்தின் டிஜிபி ஆக வேண்டும் என்பது கனவு. தமிழ்நாட்டை பொறுத்தவரை அமைதியான மாநிலம் என்பதால் இங்கு டிஜிபியாக வருவதற்கு பலரும் ஆசைப்படுகின்றனர். அப்படி இப்போது, தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக நியமிக்கப்படப்போகவிருக்கும் தகுதியான நபர்களின் பட்டியல் டெல்லிக்கு சென்றுள்ளது.
பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் யார் யார் ?
அந்த பட்டியலை பொறுத்தவரை டிஜிபி அந்தஸ்தில் உள்ள சைலேந்திரபாபு, கரன்சின்ஹா, சஞ்சய் அரோரா, சுனில் குமார் சிங், கந்தசாமி, சகில் அக்தர், ராஜேஸ்தாஸ், பிரமோத் உள்ளிட்டோரும், தற்போது ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்தாலும், 30 ஆண்டுகளுக்கு மேல் காவல் பணியாற்றியுள்ள சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால் ஆகியோரின் பெயர்களையும் சேர்த்து, மொத்தம் 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.
டிஜிபி தேர்வு எப்படி நடைபெறும் ?
இந்த 11 பேர் கொண்ட பட்டியலில் 3 பேரை தேர்ந்தெடுத்து, தமிழக அரசுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையமும், உள்துறை அமைச்சகமும் கொடுக்கும். அதில் ஒரு நபரை டிஜிபியாக தமிழ்நாடு அரசு நியமித்துக்கொள்ளலாம். இந்த தேர்வின்போது ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரியின் PAR (Performance Appraisal Report) ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் அடிப்படையில் UPSC விதிகள் படி மூன்று பேரையோ அல்லது தமிழ்நாடு காவல்துறை சிறப்பு சட்டத்தின்படி 5 பேர் கொண்ட பட்டியலோ மாநில அரசுக்கு தரப்படும்.பொதுவாக அந்த பட்டியலில் நம்பர் 1ஆக உள்ள நபர்தான் டிஜிபியாக தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், மாநில அரசு தங்களுக்கு தோதாக, பட்டியலில் இருக்கும் 5வது நபரைக் கூட டிஜிபியாக தேர்வு செய்துக்கொள்ளும் நடைமுறைகள் இருக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் கூட டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன், பட்டியலில் 5வது இடத்தில் இருந்தார். ஆனால் அவர்தான் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்யப்பட்டார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் சாய்ஸ் யார் ?
இந்த தேர்வின்போது தமிழ்நாடு சார்பில் தலைமைச்செயலாளரும், தற்போதைய டிஜிபியும் பங்கேற்கவேண்டும். அப்போது முதலமைச்சர் யாரை டிஜிபியாக நியமிக்க விருப்பப்படுகிறார் என்பதையும் அதற்கான தகுதியான காரணங்களையும் பட்டியலிட்டு மத்திய அரசுக்கு இவர்கள் விளக்க வேண்டும். அப்படி, இந்த முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வாக இருப்பது சைலேந்திரபாபு ஐபிஎஸ் என கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன ?
காவல்துறையில் சீர்த்திருத்தங்களை அமல்படுத்தவேண்டும் எனக்கோரி ஐபிஎஸ் அதிகாரி பிரகாஷ் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது, அதில்
- தகுதி வாய்ந்த, அனுபவம் கொண்ட நபர்களையே மாநிலத்தின் டிஜிபியாக தேர்வின் அடிப்படையில் நியமிக்க வேண்டும், தங்கள் இஷ்டத்திற்கு மாநிலங்கள் டிஜிபியை நியமிக்கக் கூடாது
- UPSC பரிந்துரைக்கும் 3 நபர்களில் ஒருவரையே மாநில அரசு டிஜிபியாக நியமித்துக்கொள்ள வேண்டும்
- ஓய்வு பெறுவதற்கு குறைந்தப்பட்சம் 6 மாதங்கள் இருக்கும் நிலையில் உள்ள அதிகாரிகளை மட்டுமே டிஜிபியாக நியமிக்கவேண்டும், ஓய்வு பெறும் நேரத்தில் டிஜிபியாக நியமித்து அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது.
- தற்காலிகமாகவோ அல்லது பொறுப்பாகவோ டிஜிபிக்களை நியமிக்கக் கூடாது
என குறிப்பிட்டிருந்தது. அதில் முக்கியமாக டிஜிபி பதவி என்பது மாநில மக்களின் மனித உரிமைகளை காக்கும் நிலையில் உள்ள பொறுப்பு என்பதால், தகுதியான நபர் அல்லாமல் தகுதியற்ற நபருக்கு அரசியல் காரணங்களுக்காக டிஜிபி பதவி வழங்கவே கூடாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெளிவுப்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தலைமைச்செயலாளர், உள்துறை செயலாளர் நியமங்களுக்கு கூட இதுபோன்ற விதிமுறைகளை வழங்காத உச்சநீதிமன்றம், டிஜிபி பதவியின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
சைலேந்திரபாபுக்கு சிக்கல்
மாநிலங்களுக்கான டிஜிபியாக தேர்வு செய்யப்படும் ஐபிஎஸ் அதிகாரி, நிச்சயமாக மத்திய காவல் பொறுப்பில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் என்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். ஒருவேளை இந்த உத்தரவை தற்போதைய தேர்வில் அமல்படுத்தினால், சைலேந்திரபாபு சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆவதில் சிக்கல் எற்படும். ஏனென்றால் சைலேந்திரபாபு மாநில பதவியை தவிர மத்திய காவல் பொறுப்பில் பணியாற்றியதே இல்லை. அதேபோலதான், சுனில் குமார் சிங்கும், மாநில பொறுப்பில் மட்டுமே பணியாற்றியதால் இவரும் டிஜிபியாக நியமிக்கப்படுவதில் சிக்கல்கள் இருக்கின்றன.
- கரன் சின்ஹாவை எடுத்துக்கொண்டால், அவருக்கு தமிழ் தெரியாது என்பது பின்னடைவாக கருதப்படுதால் அவரை டிஜிபியாக நியமிக்க மாநில அரசு விரும்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது
- கந்தசாமியை பொறுத்தவரை சீனியாரிட்டி அடிப்படையில் அவர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி 3 இடங்களில் வருவாரா என்ற சந்தேகம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு சட்டத்தின்படி தேர்வு நடந்தால் 5 நபர்களில் நிச்சயம் ஒருவராக அவர் இருப்பார்
- சஞ்சய் அரோரா – எல்லை பாதுகாப்பு படையில் தற்போது பணியாற்றி வருவதால் திடீரென அவரை தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமனம் செய்யப்படுவதில் உள்ள சிரமங்கள் பரிசீலனை செய்யப்படும்
அதேபோல், முதலமைச்சரின் குட் புக்கில் இடம்பெற்றுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்து தலைமைச்செயலாளரும், டிஜிபியும் மத்திய அரசு தேர்வாணயத்தில் முறையாக வாதங்களை எடுத்து வைக்கின்றார்களா என்பதை கண்காணிக்க முதல்வரின் தனிச்செயலர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஐபிஎஸ் ஆகியோரையும் டெல்லிக்கு அனுப்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி மாநிலத்தின் டிஜிபியாக ஒருவரை நியமிக்க பல்வேறு நடைமுறைகளும் சிக்கல்களும் உள்ள நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக யார் வரப்போகிறார்கள் என்ற ஆவல் காவல்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் வெகுவாக எழுந்துள்ளது. அப்படி, வரும் ஜூலை 1, 2021ல் நியமிக்கப்படும் டிஜிபி, 2023ஆம் வருடம் ஜூன் 30ஆம் தேதி வரை 2 வருடங்களுக்கு பதவியில் இருப்பார்