Modi Pet Bottle Jacket: ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அணிந்த ஆடை கரூரில் தயாரிக்கப்பட்டதா..?
சமீபத்தில் கோவா முதலமைச்சர் பிரமோத் பாண்டுரங் சாவந்திற்கு ஆடை வழங்கினோம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பில்கேட்ஸ் அவர்களுக்கும் வழங்கியுள்ளோம்.
ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர், கரூரைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த பிளாஸ்டிக் பெட் பாட்டில் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்ட துணியாலான ஜாக்கெட் அணிந்து சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது, தமிழக முதல்வருக்கு இதே போன்று ஆடை ஒன்றை வடிவமைத்து வழங்க இருக்கிறோம் என்றார் ஸ்ரீ ரங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில் சங்கர்.
ஜப்பானில் நடைபெறும் ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள ஹிரோசிமா நகருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பிளாஸ்டிக்கில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடையை பாராளுமன்ற கூட்டத்தில் பிரதமர் அணிந்து வந்தது குறித்து பரவலாக பேசப்பட்டது.
இந்த முறை ஜப்பானில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கரூர் மாவட்டம், காக்காவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கா பாலிமர்ஸ் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பெட் பாட்டில் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்ட துணியாலான ஜாக்கெட்டை மீண்டும் அவர் அணிந்து சென்றுள்ளார்.
இதுகுறித்து, ஸ்ரீ ரங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில் சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்,
“பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் கொண்டு மறுசுழற்சி செய்யப்பட்ட துணி மூலமாக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஜாக்கெட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலமாக பிரதமருக்கு வழங்கப்பட்டது. ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் அந்த ஆடையை அணிந்துள்ளார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது பெருமை அளிக்கிறது. பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பிளாஸ்டிக் பெட் பாட்டிலை மறுசுழற்சி செய்து துணியாக மாற்றக்கூடிய 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. முழுவதுமாக ஆடையாக மாற்றி விற்பனை செய்யும் ஒரே நிறுவனம் நாங்கள் மட்டுமே. இதே போன்ற ஆடையை சமீபத்தில் கோவா முதல்வருக்கும் நேரடியாக வழங்கினோம். தமிழக முதல்வருக்கும் இதே போன்று ஆடை ஒன்றை வடிவமைத்து வழங்க இருக்கிறோம்” என்றார்.
மேலும், சமீபத்தில் கோவா மாநிலத்தின் முதலமைச்சர் பிரமோத் பாண்டுரங் சாவந்திற்கு ஆடை வழங்கினோம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பில்கேட்ஸ் அவர்களுக்கும் வழங்கியுள்ளோம். உத்தர பிரதேச மாநில முதல்வருக்கும் வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்